நிழற்சாலை


மணம் தொலைத்த மலர்கள்

வரிசையாக அமர்ந்திருக்கும்

விருந்தினர்களைக் கவனித்து

பெண்கள் அனைவருக்கும்

தொடுத்த பூக்களைத்

துண்டாக்கித் தருகிறாள்

சுமங்கலி ஒருத்தி...

வரிசையின்

இடையில் பட்ட

விதவை ஒருத்தியின்

கைகளையும் மனதையும்

துண்டாடிவிட்டுத்

தாண்டிச்சென்றுகொண்டே சிரிக்கிறது

சுமங்கலி தந்து செல்லும்

துண்டு முழம் பூ.

- ப.தனஞ்ஜெயன்

பிரதிமைகளில் உறைந்தவர்


அப்பா

இறந்ததிலிருந்து

கண்ணில்படும்

அவர்

வயதொத்த

எல்லோரிலும்

தெரிகிறார்

அப்பா!


-வீ.விஷ்ணுகுமார்

காலத்தில் உறைந்த நதி

எனக்கொரு நதியிருந்தது

அதன் கரைகளில்

எனது நாகரிகம் இருந்தது.

என் பெயரைச் சொல்லி

ஓடிக்கொண்டிருந்த அந்நதியில்

அள்ளி அள்ளி

தண்ணீர் குடித்திருக்கிறேன்

உயிரில் ரத்தம் சேர்த்த நதியது.

அந்நதியைக் காணவில்லை

எனக்கு அது உயர்திணை.

அதனை நான் தேடிக்கொண்டிருப்பதைப் போல

என்னையது தேடிக்கொண்டிருந்தது.

பின்பொரு நாளில் மரணம் எய்திய

மூத்தோர் ஒருவரைப் புதைக்க

பள்ளம் தோண்டியபோது

என் நதியை நான் பார்த்தேன்.

அதன் கண்களில்

ஓடிக்கொண்டிருந்தது

என் கண்ணீர்!


- மானா பாஸ்கரன்

ஹைக்கூ கவிதைகள்

*

முத்தக் கனவு

கன்னம் துடைக்கிறது

காப்பகக் குழந்தை.


*

தொற்று முடிந்தும்

தனிமைப்பட்டே இருக்கிறாள்

அடுக்களையில் அம்மா.


*

கயிற்றில் நடக்கும்

சிறுமியின் கவனமெல்லாம்

வயிற்றின் மேல்


- கி.ரவிக்குமார்

ஜீரணமாகாத பசி

தினந்தோறும் மிச்சமாகி

கொட்டப்படுகின்ற

பலகாரங்களோடு

இருக்கும் சில்லறைக்கு

எதுவுமே கிடைக்காதென

எச்சிலூறக் கடந்துபோகும்

சிறுமியின்

ஏக்கத்தையும் சேர்த்தே

உள்வாங்கிக்கொள்கிறது

கடைவீதி குப்பைத்தொட்டி.


-காசாவயல் கண்ணன்

மவுனக் காட்சிகள்


மது அருந்திவிட்டு

வீட்டுக்குள் நுழைந்து

மயங்கிச் சாய்ந்தவனின்

காதுகளில் விழவில்லை

உடைந்து நொறுங்கிய

மனைவியின் இதயத்

துண்டுகள் எழுப்பிய ஒலி

சாக்லேட் வாங்கிவருவார்

எனும் ஆசையில் திளைத்திருந்த

குழந்தையின் இதயம்

நொறுங்கிய சத்தத்தை

கவனமாக விழுங்கிக்கொண்டது

பாரம் தாங்கிப் பழகிய பூமி!

-மருத.வடுகநாதன்

நினைவின் சாட்சியங்கள்


பரண் மேல்

ஒரு பழைய ட்ரங்க் பெட்டி கிடக்கிறது

அதை

இன்றுவரை திறந்ததில்லை


அதில் தாத்தா வாசித்த

புத்தகம் இருக்கலாம்

அல்லது

அவருக்கு வந்த

காதல் கடிதங்கள் இருக்கலாம்

சாமி படங்கள் இருக்கலாம்

அல்லது

பழைய காலாவதியான

ஆவணங்கள் இருக்கலாம்


யாரோ விரும்பிக்கேட்ட

டிரான்சிஸ்டர் ரேடியோ இருக்கலாம்

அல்லது

மீதமாகிப்போன

மருந்து மாத்திரைகள் இருக்கலாம்


திறந்துதான் பார்த்துவிடலாமே

என்று அவ்வப்போது

தோன்றினாலும்

திறக்க மனம் வரவில்லை


திறக்காமல் இருப்பதால்தான்

பெட்டி கண்ணில்படும்

ஒவ்வொரு வேளையிலும்

ஒரே பெட்டியில்

தரிசிக்க முடிகிறது

வெவ்வேறு பொருட்களை!


- ப்ரணா

கைவிடாத கடவுள்

ஆடியில்

இந்த விளைச்சலுக்கான

வரவேற்பு மழை.

வானம் பார்த்த

என் அரைக்காணி பூமிக்கு

போதுமானதாய்.

விதைத்தூவி முடிக்க

பூமியில் வேர்ப்பிடித்து

பூப்பூத்துப் பிஞ்சுவிட

ஆவணியிலும் புரட்டாசியிலும்

அடுத்தடுத்து கனமழை.

பட்ட துயரங்களுக்கு

பரிகாரமாய்

ஐப்பசியில் நல்விளைச்சல்

காணும் பூமி.


வேர்க்கடலைத் தோலை

ஜிமிக்கியாகப் போட்டு

அழகு பார்த்த செல்ல மகளின்

செவிகளுக்குச் சொந்தபந்தங்களை

சேர்த்து வைத்து

சுடலைச்சாமி கோயிலில்

மொட்டையடித்து

கடாவெட்டி காதுகுத்தி

கால்சவரன் தங்கத்தோடு போட்டு

அழகு பார்க்க

இந்த முறை நிச்சயம்

என்னை ஏமாற்றாது என் பூமி.


- பாரியன்பன் நாகராஜன்

முதிராநிலைக் கழிவு


ஊரடங்கின் பிரியங்கள் விடைபெறுகின்றன...

சும்மாடு தாண்டி அழுத்துகின்றன

அன்றாடங்களின் கூடுதல் பாரங்கள்...

சுமை மாற்றிக்கொள்ள தலை

வேறொரு தோள் தேடுகிறது..

அகலமாகும் பிரிவின் கரைகளுக்கிடையே

ஓடும் விரக்தி திரவத்தின் மட்டம் உயருகிறது...

மீட்டுருவாக்கம் நிகழாமல் திறனிழக்கும் பிரியங்களால்

முதிராநிலையில் கழிவுசெய்யப்படுகிறது காதல்.


- சுசித்ரா மாரன்

x