மதுரையில் சிறப்பு புத்தகக் காட்சி


மதுரையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்கி செப்டம்பர் 10-ம் தேதி வரையில், புத்தகத் திருவிழா நடைபெறுவது வழக்கம். தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் (பபாசி), மதுரை மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் இந்தத் திருவிழா, கரோனா காரணமாக கடந்த ஆண்டு நடைபெறவில்லை. இந்த ஆண்டும் அது நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதை ஈடுகட்டும் விதமாக, வாசகர்கள் நலன் கருதி இந்த ஆண்டு 'நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம்' சார்பில், சிறப்பு புத்தகக் காட்சி நடைபெறும் என்று அந்நிறுவன மண்டல மேலாளர் கிருஷ்ணமூர்த்தி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மதுரை புத்தகத் திருவிழாவை நினைவுகூரும் விதமாக, மதுரை மேலகோபுரத் தெருவில் உள்ள எங்களது புத்தக விற்பனை நிலையத்திலேயே சிறப்பு புத்தகக் காட்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். செப்டம்பர் 2 முதல் 15-ம் தேதி வரை, தினமும் காலை 9.30 முதல் மாலை 8.30 மணி வரையில் இந்தப் புத்தகக் காட்சி நடைபெறும். பல்வேறு புதிய புத்தகங்களின் அணிவகுப்புடன் நடைபெறும் இதில், அனைத்துப் புத்தகங்களுக்கும் 10 முதல் 20 சதவீ தம் தள்ளுபடி வழங்கப்படும்.

குழந்தைகளுக்காக ரூ.10, ரூ.15, ரூ.20 விலைகளிலும் நூல்கள் விற்பனைக்கு உள்ளன. கூடவே, சிறுவர்களுக்கான அறிவியல், பொது அறிவு, விஞ்ஞானக் கதைப் புத்தகங்களுக்கு 20 சதவீ த சிறப்புத் தள்ளுபடி உண்டு. ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள 15 புத்தகங்களைக் கொண்ட மார்க்சிய செவ்வியல் நூல்கள் தொகுப்பானது ரூ.3,500-க்கும், ரூ.6,500 விலைகொண்ட கம்பராமாயண 8 நூல்கள் ரூ.4,500-க்கும் கிடைக்கும் . இதேபோல இறையன்பு ஐஏஎஸ் எழுதிய நூல்களுக்கு 20 சதவீதம், அப்துல் கலாம் பற்றிய நூல்களுக்கு 25 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படும். மொத்தமாக 5 ஆயிரம் ரூபாய்க்கு புத்தகம் வாங்கினால், புத்தகங்களைப் பற்றிய இதழான 'உங்கள் நூலகம்' மாத இதழ் ஓராண்டு முழுக்க உங்கள் இல்லத்துக்கு இலவசமாக அனுப்பி வைக்கப்படும்.

அரசு அறிவித்துள்ள சமூக இடைவெளி, முகக் கவசம் உள்ளிட்ட வழிமுறைகளைப் பின்பற்றி வாசகர்கள் புத்தகக் காட்சியில் கலந்துகொண்டு பயன்பெறலாம்’ என்று தெரிவித்துள்ளார்.

x