எந்தக் குதுர பிடிச்சிருக்கோ அந்தக் குதுரயில ஏறிக்கோ...


சிங்கம்மா

பக்கத்து கிராமத்தில் நேற்று ஒரே மேளதாளம், வேட்டுச் சத்தம்.. கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் போல என்று கடந்து சென்றுவிட்டேன். எல்லாம் முடிந்த பிறகுதான் தெரிந்தது, அது சிங்கம்மாவை வழியனுப்புகிற வைபவம் என்று.

எங்கள் வீட்டுக்கு வாடிக்கையாகப் பால் கொண்டு வரும் பாட்டியம்மா, பக்கத்து ஊரான மேட்டூரில் சிங்கம்மாவை வழியனுப்புகிற சடங்கு நடந்ததாகச் சொன்னார்.

யார் அந்த சிங்கம்மா என்கிறீர்களா? அது ஒரு பெண்ணின் ஆவி. மேலூர் வட்டாரப் பெண்களை 20 ஆண்டுகளாக ஆட்டுவிக்கிற சக்திமிக்க ஆவி என்றும், அவள் பிடிக்கும்போது சாதாரணமாகப் பிடித்துக்கொள்ளுவாள். ஆனால், விட்டுப் போகவேண்டும் என்றால் குறைஞ்சது 50 ஆயிரமாவது செலவு வைத்துவிட்டுத்தான் போவாள் என்று உள்ளூர் மக்கள் சொல்கிறார்கள்.

அவளது வரலாறாக பாட்டி சொன்ன கதை இது.

"நரிக்குறவ இனத்தைச் சேர்ந்த 16, 17 வயதுப் பெண்தான் சிங்கம்மா. தன் கூட்டத்தாருடன் 20 ஆண்டுகளுக்கு முன்பு மேலூர் பகுதிக்கு வந்தாளாம். வெளியூர் என்பதால், எல்லாவற்றையும் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தவள், ஒரு கட்டத்தில் தன்னுடைய கூட்டத்தாரைத் தவறவிட்டுவிட்டாள். தனியே, அழுதபடி பசியோடு நடந்துவந்த அவளிடம் 3 இளைஞர்கள் பேச்சுக்கொடுத்திருக்கிறார்கள். பக்கத்து ஊரில் திருவிழா நடக்கிறது. பந்தல் போட்டுக் கறிச்சோறு போடுகிறார்கள். ’நாங்க அங்கதான் போறோம் வா... சாப்பிட்டுட்டு உன் கூட்டத்தைத் தேடலாம்’ என்று சொன்னார்களாம் அந்த இளைஞர்கள். அதை நம்பி அந்தப் பெண் போக, வழியிலேயே அவளைப் பலாத்காரம் செய்து, கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டார்களாம் அந்தப் பாவிகள். சம்பவம் நடந்தது மேலூரில் என்பதால், அங்கேயே அவளுக்கொரு கோவில் கட்டி வழிபட்டிருக்கிறார்கள் அவளது கூட்டத்தினர்.

அன்றில் இருந்து, சுற்றுவட்டாரத்தில் எந்தப் பெண் பாதிக்கப்பட்டாலும் சிங்கம்மா காவல் தெய்வமாக வந்து காத்து நிற்கிறாள் என்பது மக்களின் நம்பிக்கை. அது உடல் பாதிப்பாக இருந்தாலும் சரி, மன பாதிப்பாக இருந்ததாலும் சரி.. சிங்கம்மா வந்துவிடுவாள். வந்தால், அந்தப் பெண்ணின் பிரச்சினையைத் தீர்க்காமல் போக மாட்டாளாம் சிங்கம்மா.

ஒருத்தி மீது சிங்கம்மா இறங்கிவிட்டதாக சந்தேகம் வந்தால், மேலூரில் இருந்து கோடாங்கிகளை கூட்டி வருவார்கள் அவளது உறவினர்கள். அவர் உறுதி செய்துகொண்டு, ’உனக்கு என்னம்மா வேணும். இந்தப் புள்ளைய விட்டுட்டுப் போம்மா’ என்று கேட்பார். கறிச்சோறு தொடங்கி புத்தாடை, வளையல் வரை என்னென்ன கேட்கிறதோ அத்தனையும் வாங்கிக் கொடுக்க வேண்டும். திங்கட்கிழமைதான் சிங்கம்மா வீடு திரும்புவாள். எனவே, அன்றைக்குச் சொந்தபந்தங்களை வீட்டிற்கு வரவழைத்து அத்தனை பேருக்கும் ஆக்கிப்போட வேண்டும். பிறகு மேளதாளம், வாண வேடிக்கை, மாலை மரியாதையுடன் சடங்குகளைச் செய்தால் அவள் போக ஒப்புக்கொள்வாள். சில நேரம் அடுத்த வாரம் திங்கட்கிழமை போறேன் என்று சொல்வதும் உண்டு. அப்படிப் போகிறேன் என்று அவள் ஒப்புக்கொண்டால், வேன் பிடித்து மேலூரில் உள்ள சிங்கம்மா கோயிலுக்கு கூட்டிப்போவார்கள் கோடங்கிகளும், உறவினர்களும். கடைசியாக உனக்கு எந்தக் குதிரை பிடிச்சிருக்கோ அந்தக் குதிரை மேல ஏறிக்கோ என்று சொன்ன பிறகுதான், சிங்கம்மா வெளியே போவாளாம்."

இதுதான் பாட்டி சொன்ன கதை.

இந்தச் சடங்கை நேரில் பார்க்கும் வாய்ப்பை இழந்துவிட்டேன். நடந்து முடிந்த பிறகு என்னிடமும், மனைவியிடமும் பல பெண்கள் இந்தச் சடங்கு பற்றிச் சொல்லி, ”மிஸ் பண்ணிட்டீங்களே?” என்று கேட்டு ஆவலைத் தூண்டினார்கள். இதுவரையில் இந்தச் சடங்கு பற்றி பத்திரிகைகளில் செய்தி வெளியானதில்லை. இன்னொரு கிராமத்தில், வருகிற திங்கட்கிழமை 8 வயது பெண் குழந்தை ஒன்றுக்கு சிங்கம்மா சடங்கு நடக்கவிருக்கிறது. அப்போது நிச்சயம் நான் நேரில் போகிறேன். வாசகர்களுக்கு இன்னும் கூடுதல் தகவல்கள், படங்களுடன் செய்தி தருகிறேன். அதுவரையில், உங்களைப் போலவே நானும் ஆவலுடன் காத்திருக்கத்தான் வேண்டும்.

x