மேகேதாட்டு சாத்தியக்கூறு அறிக்கை ரத்து செய்யப்படுமா?


மேகேதாட்டு

காவிரி நீர் மேலாண்மை ஆணையக்கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அக்கூட்டத்தில் கர்நாடகத்தின் மேகேதாட்டு அணை குறித்த சாத்தியக்கூறு அறிக்கை ரத்து செய்யப்படுமா என தமிழக விவசாயிகள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

காவிரியின் குறுக்கே புதிதாக 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் மதிப்பில் மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. அதன் மூலம் குடிநீர் திட்டங்களைச் செயல்படுத்தவும், 400 மெகாவாட் மின்உற்பத்தி நிலையத்தை ஏற்படுத்தவும் கர்நாடகா முடிவெடுத்துள்ளது. ஏற்கெனவே, காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரை வழங்க மறுக்கும் கர்நாடகா, மேகேதாட்டு அணையை கட்டினால் தமிழகத்துக்கு காவிரியிலிருந்து இப்போது வந்து கொண்டிருக்கும் உபரிநீர்கூட இனி வராது என்று சொல்லி தமிழக விவசாயிகள் தரப்பில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், மத்திய அரசு தங்களுக்கு சாதகமாக இருப்பதை பயன்படுத்திக் கொள்ளும் கர்நாடக பாஜக அரசு, மேகேதாட்டு அணையைக் கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை தயார்செய்து, மத்திய நீர்வள ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கை குறித்து தங்கள் கருத்தைத் தெரிவிக்குமாறு தமிழகம் மற்றும் கேரளாவுக்கு மத்திய நீர்வள ஆணையம் தகவல் அனுப்பியிருப்பதாகவும் தெரிகிறது.

இதனிடையே தமிழக அரசு இந்த விவகாரத்தில் நீதிகேட்டு உச்சநீதிமன்றத்தை அணுகியிருக்கிறது. நடுவர் மன்ற தீர்ப்பாயத்தின் தீர்ப்பில் காவிரியில் குறுக்கே அணை கட்ட வேண்டிய அவசியம் கர்நாடகாவுக்கு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பாய உத்தரவை செயல்படுத்தாமல் காவிரி நீரை முழுமையாக தானே பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில்தான் மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிக்கிறது.

உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக மத்திய வனத்துறையிடம் கர்நாடக அரசு அனுமதி கேட்டு மனு கொடுத்துள்ளது. மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பான வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் வரை, அணை கட்டுவதற்கான, எந்த நடவடிக்கையும் எடுக்க, கர்நாடக அரசுக்கு தடை விதிக்க வேண்டும். இது தொடர்பாக எந்தவித அனுமதியும் வழங்கக்கூடாது என மத்திய நீர்வளத் துறைக்கும் வனத்துறைக்கும் உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசின் மனுவில் கூறப்பட்டுள்ளது.

கர்நாடக முதல்வர்

இந்நிலையில்தான் காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டம் 31-ம் தேதி நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் மேகேதாட்டு அணை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக மத்திய நீர்வளத் துறை அமைச்சர் தெரிவித்ததாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். இந்தக் கருத்து உள்நோக்கம் கொண்டதாகவும், மத்திய அரசினுடைய கர்நாடக ஆதரவு நிலைப்பாடு இதன்மூலம் வெளிப்படுவதாகவும் தமிழக விவசாயிகள் கவலைப்படுகிறார்கள்.

ஆணையக் கூட்டத்தில் இதுகுறித்த விவாதம் நடத்தக்கூடாது என்றும் தமிழக விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். அப்படி நடந்தால் அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிப்பது மட்டும் போதாது. தமிழகம், புதுச்சேரி, கேரள மாநிலங்கள் இத்திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும். அப்படி வாக்களித்தால் மட்டுமே மேலாண்மை ஆணையம் கர்நாடகாவின் சாத்தியக்கூறு அறிக்கையை நிராகரிக்க முடியும். அதற்கு தமிழகம் சார்பில் கேரளாவின் ஆதரவை முன்னரே கேட்டுப்பெற வேண்டும் என்றும் தமிழக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கிறார்கள்.

இப்படிச் செய்வதன் மூலம் மட்டுமே மேகேதாட்டு அணை குறித்த கர்நாடகத்தின் சாத்தியக்கூறு அறிக்கையை மேலாண்மை வாரியம் நிராகரிக்க முடியும். இல்லாதபட்சத்தில் மத்திய, கர்நாடக பாஜக அரசுகள் தமிழக அரசின் சட்டப் போராட்டங்களையும் மீறி தமிழக நலனுக்கு எதிரான முடிவுகளை எடுக்கவும் தயங்காது என்பதே தமிழக விவசாயிகள் தரப்பு வாதமாக இருக்கிறது.

x