சிரிப்பால் சிறப்படைந்த வேலம்மாள் பாட்டி!


வேலம்மாள் பாட்டி

சிரிப்பால் வைரலான வேலம்மாள் பாட்டிக்கு, முதியோர் உதவித்தொகை வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு கரோனா நேரத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 தவணையாக தலா 2 ஆயிரம் ரூபாயும், விலையில்லாப் பொருட்களும் வழங்கியது. நாகர்கோவிலைச் சேர்ந்த வேலம்மாள் பாட்டி இந்தப் பரிசுத் தொகையை வாங்கிச் செல்லும்போது, முகம் நிறைய புன்னகையோடு சென்றார். இதைப் பார்த்த, நாகர்கோவிலைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஜாக்சன் ஹெர்பி, அந்தப் புன்னகையைப் படம் பிடித்தார். அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. அந்தப் புகைப்படத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், ”இந்த சிரிப்பே நம் ஆட்சியின் சிறப்பு” என பதிந்திருந்தார்.

வேலம்மாள் பாட்டி தனது குடும்பத்தினராலேயே கைவிடப்பட்டு வீட்டுத் திண்ணையில் உண்டு, உறங்கி வாழ்ந்து வந்தார். அந்த புகைப்படம் கொடுத்த அடையாளத்தால், அரசு அதிகாரிகள் மட்டத்திலும் பாட்டியின் ஏழ்மைநிலை தெரியவந்தது. இது முதல்வரின் கவனத்துக்கும் தெரியவந்ததைத் தொடர்ந்து, வேலம்மாள் பாட்டிக்கு தமிழக அரசின் முதியோர் உதவித்தொகை வழங்க உத்தரவிட்டுள்ளார். நடப்பு மாதத்தில் இருந்தே வேலம்மாள் பாட்டிக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

x