கீழணை, வீராணத்தில் தண்ணீர் திறப்பு


தண்ணீர் திறக்கும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

கடலூர், நாகை, தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளின் சம்பா பருவ பாசனத்திற்காக தஞ்சை மாவட்டம் அணைக்கரையிலுள்ள கீழணையிலிருந்து இன்று 29 -ம் தேதி மாலை தண்ணீர் திறக்கப்பட்டது.

.

பூ தூவும் அமைச்சர்கள்...

காவிரி டெல்டா பாசனத்திற்காக இந்த ஆண்டு ஜூன் 12 -ம் தேதியே மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஒருவார காலத்தில் கல்லணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கீழணைக்கு வந்து சேர்ந்தாலும் டெல்டா கடைமடை பகுதியில் தூர்வாரும் பணிகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வந்ததால் கீழணை இது நாள் வரை திறக்கப்படவில்லை. தற்போது பணிகள் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் கீழணை திறக்கப்பட்டுள்ளது.

தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு பாசன மதகுகளை திறந்து வைத்தனர். இதில் மாவட்ட ஆட்சியர்கள், விவசாய சங்க பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

கீழணையில் திறக்கப்படும் தண்ணீர் கொள்ளிடம் வடக்கு ராஜன் வாய்க்கால், கான்சாகிப் வாய்க்கால், கவரப்பட்டு வாய்க்கால், கஞ்சன் கொல்லை வாய்க்கால், வடவார், தஞ்சாவூர், மயிலாடுதுறை மற்றும் நாகை பகுதிகளில் பாசனத்துக்குப் பயன்படும்.

இதுபோல, காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியில் இருந்தும் பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இதிலிருந்து ராதா மதகில் விநாடிக்கு 10 கன அடியும், வீராணம் புதிய மதகில் விநாடிக்கு 74 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு இடங்களில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதை விவசாயிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து மூன்று மாவட்டங்களில் உள்ள கடைமடை பகுதிகளில் சம்பா சாகுபடி பணிகள் தீவிரமடையும் என எதிர்பார்க்கலாம்.

x