விவசாயிகள் முற்றுகைப் போராட்டம் ஒத்திவைப்பு


பி.ஆர்.பாண்டியன்

சம்பா பயிருக்கான காப்பீடு நிச்சயம் உண்டு என்ற அரசின் அறிவிப்பால் நிம்மதியடைந்துள்ள தமிழக விவசாயிகள் இதுகுறித்த தங்களின் போராட்ட அறிவிப்பையும் திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் சென்ற 2020 -21 -ம் ஆண்டு சம்பா பயிருக்கு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இதுவரையிலும் இழப்பீடு வழங்கப்படவில்லை. இதனால் எதிர்வரும் சம்பா சாகுபடியை துவங்க முடியுமா என்கிற கேள்வி விவசாயிகளிடம் எழுந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் பெய்த பெரும் மழையால் மிகப் பெரும் மகசூல் இழப்பை சந்தித்த விவசாயிகள் மறு உற்பத்திக்கு வழியின்றி பல்வேறு சிரமங்களுக்கு ஆட்பட்டுள்ளனர்.

இந்நிலையில், காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் இவ்வாண்டு சாகுபடிக்கான காப்பீடு செய்யலாம் என்று அறிவிக்க கோரியும் மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 31-ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டது.

போராட்டத்துக்கான முன் தயாரிப்புக்களில் விவசாய சங்கத்தினர் ஈடுபட்டுவந்த நிலையில் வேளாண்துறை அமைச்சர் எம். ஆர். கே பன்னீர்செல்வம் கடலூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது, 2020-21 ல் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான தமிழக அரசின் பிரீமிய பங்குத்தொகை விடுவிக்கப்பட்டு விட்டதாகவும், மத்திய அரசின் பங்குத் தொகையையும் பெற்று, காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் விரைந்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

அதுமட்டுமில்லாமல் இந்த ஆண்டு நடப்பு சம்பா பருவத்திற்கு காப்பீடு உண்டா, இல்லையா என்று குழப்பம் நிலவிவந்ததற்கும் அவர் முடிவுகட்டி, விரைவில் காப்பீடு செய்ய அறிவிப்பு வெளியிட உள்ளதாகவும் உறுதியளித்தார். நடப்பு ஆண்டிற்கான குறுவை காப்பீடு செய்ய கால அவகாசம் இல்லாத நிலையில் அதுமட்டும் கைவிடப் பட்டுள்ளதாகவும், இயற்கை சீற்றத்தால் பாதிப்பு ஏற்பட்டால் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து இழப்பீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

இதனை ஏற்றுக் கொண்டு, அமைச்சரின் அறிவிப்பிற்கு மதிப்பளித்து, ஆகஸ்ட் 31-ம் தேதி நடத்துவதாக இருந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்

x