பேசிக்கிட்டாங்க...


தஞ்சாவூர்

ஆர்.ஆர்.நகரில் இருவர்...
“கரோனா காலத்துல ரெண்டு குடும்பத்தை மட்டும் வெச்சு, சிம்பிளா கோயில்ல கல்யாணத்தை முடிச்சிடலாம்னு பார்த்தா, பொண்ணே கிடைக்கமாட்டேங்குதே...”
“பொறுத்ததும் பொறுத்தே… இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்ணு மச்சி. மூணாவது அலை வரும்னு நியூஸ்ல சொல்றாங்க... பேசாம ஆன்லைன் மீட்டிங் போட்டு அதுலேயே கல்யாணத்தை முடிச்சுடலாம். ஊருக்கு ஒருவேளை சாப்பாடு போட பயந்து கரோனாவையெல்லாம் காரணம் காட்டுறியே… உனக்கெல்லாம் எப்படிடா பொண்ணு கிடைக்கும்?”
(‘சிங்கிள்’ நண்பர் கப்சிப் ஆகிறார்!)
- தே.ராஜாசிங்ஜெயக்குமார், தஞ்சாவூர்

வேலூர்

டீக்கடை ஒன்றில் அரசு ஊழியர்கள் இருவர்...
“ஏம்பா… டி.ஏ விஷயத்துல தமிழக அரசு நமக்குப் பட்ட நாமம் போட்டுருச்சே?”
“அதான் வெள்ளை அறிக்கையில நிதிநிலைமை மோசமா இருக்கு... ஏப்ரல் வரை பொறுத்துக்கிடுங்கன்னு பொருத்தமான விளக்கம் சொல்லிட்டாங்கல்ல?”
“அதெல்லாம் சரிதான். திமுககாரங்க எப்பவும் மத்திய அரசை விமர்சிச்சிக்கிட்டே இருப்பாங்க… ஆனா மத்திய அரசு ஊழியர்களுக்கெல்லாம் டி.ஏ கரெக்டா போய்ச் சேர்ந்துடுது… திமுக அரசு இதை மட்டும் ஃபாலோ பண்ண மாட்டாங்களா?”
“நிர்மலா சீதாராமன் ஒண்ணும் வெள்ளை அறிக்கை விடல இல்ல… அதான் டி.ஏ தந்துட்டாங்க போல...”
“நீயெல்லாம பொருளாதார ஆலோசனை குழுவுல இருக்க வேண்டிய ஆள்… வேகாத வெயில்ல எங்ககூட டீ குடிச்சிட்டு நிற்கிறே..!”
-அ.சுகுமார், காட்பாடி

தலைஞாயிறு

கடைத்தெருவில் இருவர்...
“என்ன தம்பி... சைக்கிளும் 10 லிட்டர் கேனுமா அலையுறீங்களே?”
“பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைஞ்சுதுன்னு கேள்விப்பட்டேன்… வீட்ல இருக்கிற புல்லட்டுக்கு இப்பவே 10 லிட்டர் வாங்கி வெச்சிக்கிட்டா 30 ரூபாய் மிச்சம் பண்ணலாம்னுதான்.”
“அதுக்குப் பேசாம இந்த சைக்கிள்லேயே எல்லா இடத்துக்கும் போய்ட்டு வந்தா பெட்ரோலை ஃபுல்லாவே மிச்சம் பண்ணலாமே தம்பி!?"
“அதுவும் சரிதான்... அடுத்த மாசம் எனக்குக் கல்யாணம். பொண்ணு வீட்ல பேட்டரி வண்டி வாங்கி தர்றதாச் சொல்லி இருக்காங்க… நீங்க சொன்ன மாதிரி ஃபுல்லாவே மிச்சம்தான்...”
“தம்பி அப்பவும் கரன்ட் பில் கட்டணுமே?”
“எப்படியோ ஓசியிலே வண்டி ஓட்டலாம்னு நெனைச்சா குழப்பிவிடுறதே உங்க வேலையா போச்சுண்ணே!”
-எஸ்.சுதாகரன், வானவன்மகாதேவி

திருச்சி

தில்லை நகரில் இருவர்...
“மாப்ளே… கடன் வாங்கி ரொம்பக் கஷ்டப்பட்டாச்சு. அந்த அனுபவத்தையெல்லாம் வச்சு ‘கடனில் இருந்து விடுபடுவது எப்படி’ன்னு ஒரு புத்தகம் எழுதப் போறேன்.”
“யாருக்குடா சமர்ப்பணம் செய்யப்போறே?"
“அதுதான் குழப்பமா இருக்கு... எடப்பாடியாருக்குப் பண்ணலாம்னா, அவரு பொருளாதாரமே பிடிக்கலைங்கிறாரு… பேசாம நிதியமைச்சருக்கு சமர்ப்பணம் பண்ணிடலாமா?”
“அதைவிட நல்ல ஐடியா நான் சொல்றேன். பேசாம அந்தப் பக்கத்தைக் காலியா விட்டுடு. உன் பங்குக்கு ஒரு வெள்ளை அறிக்கையா இருக்கும்ல?”
- சிவம், திருச்சி

நாகர்கோவில்

வடசேரி டீக்கடையில் இரு நண்பர்கள்...
“என்ன மக்கா! அந்த டிபார்ட்மென்ட் ஸ்டோர்ல  ‘புல்’னு போட்டிருக்கிற கதவை இழுக்கிறதுக்குப் பதிலா, தள்ளி என் மானத்தை வாங்கிட்டியே... இன்னுமாடா  ‘புல்’லுக்கும்  ‘புஷ்’சுக்கும் அர்த்தம் தெரியாம இருக்கே?!”
“ஆமாமா, ரைட்ல திரும்புன்னு சொல்லி பீச்சாங்கை பக்கம் திரும்ப வழி காட்டுன நீயெல்லாம் என்னை கேலி பண்ணுறியாக்கும்? இதுக்குத்தான்டா உன்கூட வெளில வர்றதே இல்ல… நான் கெளம்புறேன்.”
“சரி விடு மக்கா! விளையாட்டுக்குச் சொன்னா எதிர்க்கட்சிக்காரங்க மாதிரி உடனே வெளிநடப்பு பண்றியே… ஒழுங்கா ரெண்டு டீக்கும் காசு குடுத்துடு.”
-எ.முகமது ஹுமாயூன், நாகர்கோவில்

சென்னை

ஒரு ஏடிஎம்மில் இரு நண்பர்கள்...
“என்னடா! ஏடிஎம்ல பணத்தை எடுத்துட்டு திரும்பத் திரும்ப எண்ணிப் பார்த்துட்டு இருக்கிறே? லைன்ல நிக்கிறவங்க லைட்டா முறைக்கிறாங்க பாரு...”
“முறைச்சா முறைச்சிட்டுப் போகட்டும். அமவுன்ட் குறைஞ்சுதுன்னா அவங்களா தருவாங்க?”
“அதுசரி அமவுன்ட் குறைஞ்சா இந்த மிஷின் மட்டும் தந்துடுமாக்கும்?”
“நான் எண்ணுறது சிசிடிவி கேமராவைப் பார்த்து... அப்படிக் குறைஞ்சாலோ டேமேஜ் நோட்டு இருந்தாலோ அதுல க்ளீனா பதிவாகிடும்ல... அப்புறமா அதை ப்ரூஃபா வச்சு க்ளெய்ம் பண்ணலாம்டா.”
“என்னா ஒரு டிடெக்டிவ் மைண்ட்! நான் ஒரு சிபிஐ ஆபீசரோட ஃபிரெண்டுன்னு நினைக்கும்போது ரொம்பப் பெருமையா இருக்குடா!”
- எ.எம்.முகமது ரிஸ்வான், சென்னை

x