புதர் நிலம்தான் சோலையானது...


சோலைக்குள் சித்ரலேகா

வானொலியில் பணியாற்றுபவர்கள் கதை, கவிதை எழுதி வாசிப்பார்கள். கூடுதலாக இசையில், பேச்சில், செய்தி வாசிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். பாத்திரங்களுக்கு ஏற்ப உச்சரிப்பில் ஏற்ற இறக்கங்கள் கூட்டி வானொலி நாடகங்களில் நடிப்பார்கள். அப்படி வளர்ந்தவர்கள் அந்த வானொலியிலேயே நிகழ்ச்சி அறிவிப்பாளர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர், நிகழ்ச்சி தயாரிப்பாளர், உதவி இயக்குநர், இயக்குநர் ரேஞ்சுக்கும் செல்வார்கள்.

வானொலிக்கான அத்தனை அம்சங்களும் பொருந்தி சாதனை படைத்து இயக்குநர் ரேஞ்சுக்கு உயர்ந்த கோவை வானொலி நிலைய இயக்குநர்(பொறுப்பு) சித்ரலேகா மரம், செடி, கொடிகள் வளர்ப்பில் கொள்ளை ஆர்வம் கொண்டவராக உள்ளார். கோவை திருச்சி சாலையில் அமைந்துள்ள கோவை வானொலி நிலையம் பின்புறம் புதராக கிடந்த சுமார் ஒன்றரை ஏக்கர் நிலத்தை சோலையாகவே மாற்றியுள்ளார்.

நொச்சி, சரக்கொன்றை, கறிப்பலா, அத்தி மரம், மருதாணி, வாட்டர் ஆப்பிள், சீமை இலந்தை, சப்போட்டா, மேக்னோலினா, கலாக்காய், நாவல், அரிநெல்லி, கொய்யா, தெச்சி, அரளி, மஞ்சள் மந்தாரை, வயலட் மந்தாரை, எலுமிச்சை, ஒலிவியா, மனோரஞ்சிதம், செண்பகம், நைட் குவீன், சர்க்கரைக் கொல்லி, திருநீறு பச்சிலை, மகிழம், பாகல், சங்கு புஷ்பம், வில்வம், மூங்கில், மல்பெரி, திராட்சை, வெற்றிலைக் கொடி, ரோஜா, நிஷாகந்தி, கிருஷ்ண கமலம் என எண்ணவே முடியாத அளவுக்கு தாவரங்கள். அதையெல்லாம் குழந்தையைப் போல் நம்மைக்கூட்டிச் சென்று காட்டி குதூகலித்தார். இது பற்றி அவர் குறிப்பிடும்போது,

சித்ரலேகா

‘‘காரைக்குடி வானொலியில் ரெண்டரை வருஷம் பணியாற்றியபோதும் அங்கேயும் இதேபோல் ஒரு சோலையை உருவாக்கினேன். பத்து வருஷம் முன்னால இங்கே திரும்பினப்ப இதை செய்யணுன்னு தோணுச்சு. செஞ்சேன். இப்ப, இதில் எங்க நிலைய அலுவலர்கள், ஊழியர்கள் எல்லாரும் ரொம்ப இன்வால்வ் ஆகிட்டாங்க. எல்லோரும் சேர்ந்தே பராமரிக்கிறோம். மாசத்துக்கு ஒரு தடவை அத்தனை பேரும் சேர்ந்து இதற்கான மராமத்து பணிகளை செய்கிறோம். இந்த செடி கொடிகள் ஒவ்வொன்றும் பூ பூக்கும் போதும், காய்,கனி கொடுக்கும் போதும் ஒவ்வொரு படைப்புகள் எங்களுக்குள் மலர்ச்சி பெறுவதாகவே உணர்கிறோம்!’’ என்கிறார்.

கோவை வானொலியில் சிறுவர் உலகம், மாதர் நிகழ்ச்சி, இளையபாரதம், ஹலோ டாக்டர், உழவர் என ஏராளமான நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கிய சித்ரலேகா பிரபலப்பட்டது பூ பூக்கும் நேரம் என்ற நிகழ்ச்சியில்தான். அப்படி பூ போலவே பேசி, குரல் வளத்தில் கொடி கட்டிப் பறந்து பசுமையிலும் கொடி நாட்டி இருக்கிறார் என்றால் அதிசயம்தானே?

x