புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுக!


மரத்தடி நாடாளுமன்றம்

நாடாளுமன்றம் விவாதங்களின்றி முடங்கிக் கிடப்பதாகச் சொல்லி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழகம் முழுக்க ‘மக்கள் நாடாளுமன்றம் மாதிரி போராட்டம்’ நடத்த இருப்பதாக முடிவெடுத்து அறிவித்துள்ளது. இதன்படி, கிராமங்கள்தோறும் மக்களை திரட்டி நாடாளுமன்றம் போலவே கூட்டங்களை நடத்துவது என தீர்மானித்துள்ளது.

அந்த வகையில், தமிழகம் முழுவதும் ஆகஸ்டு 23 முதல் 27 வரை 5,000 இடங்களில் மக்கள் நாடாளுமன்ற கூட்டத்தை கூட்டி விவாதித்து, தீர்மானங்களை நிறைவேற்ற முடிவு செய்தது.

இதன் ஒருபகுதியாக ஈரோடு வடக்கு மாவட்டம், சத்தியமங்கலம் தெற்கு ஒன்றியம், செண்பகபுதூர் ஊராட்சியில் பெரிய மரத்தடியில் இப்படியொரு மக்கள் நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு அவைத் தலைவராக எஸ்.தேன்மொழி தேர்வு செய்யப்பட்டார். வேளாண் விளைபொருள் வணிக ஊக்குவிப்புச் சட்டம், வேளாண் சேவைகளுக்கான ஒப்பந்தச் சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்தச்சட்டம் ஆகிய 3 சட்டங்கள், மின்சார திருத்தச் சட்டம் மற்றும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு மசோதா ஆகியவற்றை திரும்பப்பெற வலியுறுத்தும் தீர்மானத்தை முன்மொழிந்து, மக்கள் நாடாளுமன்றத்தின் வேளாண் அமைச்சர் அறச்சலூர் செல்வம் பேசினார்.

அடுத்து, உறுப்பினர்கள் யுவராஜ், கீதா ஆகியோர் தீர்மானத்தை ஆதரித்துப் பேசினர். இந்த வேளாண் விரோத சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தில்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதுடன், இந்தச் சட்டங்களை திரும்பப்பெற மத்திய அரசை வலியுறுத்தி இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிகழ்வில் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவரும் திமுக தெற்கு ஒன்றியச் செயலருமான கே.சி.பி.இளங்கோ, ஒன்றிய கவுன்சிலர் வி.என்.சின்னசாமி, சத்தியமங்கலம் கூட்டுறவு உற்பத்தியாளர் விற்பனை சங்க தலைவர், வி.சி.வரதராஜ், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் வி.எம்.திருமூர்த்தி, கோணமூலை ஊராட்சிமன்றத் தலைவர் குமரேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.சி. நடராஜ் மற்றும் விவசாயிகள்,பெண்கள், இளைஞர்கள் பலர் பங்கேற்றனர்.

இதற்கான காணொலி பதிவு கீழே:

x