மென்பட்டுக்கு பெயர் பெற்ற சிறுமுகை


மென்பட்டு நெசவுப்பணியில்...

மரக்கூழ் அட்டை, அதிலிருந்து செயற்கை பட்டு நூல் என தயாரித்து குஜராத் மாநிலத்துக்கு அனுப்பி வந்த ஆலை சிறுமுகை - விஸ்கோஸ். சுற்றுச்சூழல் மற்றும் உற்பத்தி நஷ்டம் காரணமாக அந்த நிறுவனம் மூடப்பட்டுவிட்டது. ஆனால், அந்த ஊரின் அடையாளமே மென்பட்டு சேலைகள் என்று இன்று மாறிவிட்டது. இந்தச் சின்னஞ்சிறு சிறு கிராமம் சிறுமுகை, காஞ்சிபுரம் போல மென்பட்டு சேலை தயாரிப்புக்கு முன்னோடியாக மாறியிருக்க, தற்போது கரோனா காரணமாக அது பெரும் நலிவைச் சந்தித்து வருகின்றது.

மேட்டுப்பாளையத்திலிருந்து சுமார் 15 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த கிராமத்தில், திரும்பின பக்கமெல்லாம் கைத்தறி சப்தமே கேட்கிறது. எந்த வீடுகளுக்குள் சென்றாலும் பளீரிடும் வண்ண, வண்ண பட்டுச் சேலைகளே மிளிர்கின்றன. இங்கே சுமார் 10 ஆயிரம் குடும்பங்கள் கைத்தறி தொழிலையே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். இங்கு தயாராகும் மென்பட்டு சேலை ரகங்கள், தரம் மற்றும் வேலைப்பாடுகள் காரணமாக நாடு முழுவதும் வர்த்தகர்கள் மத்தியில் அறிமுகமாகியுள்ளது.

இங்கு தயாராகும் கைத்தறி மென்பட்டு, கோரா காட்டன் மற்றும் காட்டன் சேலைகள் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றன. பட்டுச் சேலைகளில் போடப்படும் மிக சிறந்த கலைநயம் மிக்க டிசைன்களுக்கு, மத்திய அரசால் வழங்கப்படும் தேசிய விருதை 5 முறையும், 1 லட்சத்து 64 ஆயிரம் வண்ணங்களில் நெய்யப்பட்ட பட்டுச் சேலைக்கு மாநில அரசு விருதையும் சிறுமுகை பகுதி கைத்தறி நெசவாளர்கள் வென்றுள்ளனர் என்பதே, இவர்களின் கலைச்சிறப்புக்கு நல்ல சான்று.

தயாரான மென்பட்டு சேலைகள்

காஞ்சிபுரம், மதுரை, ஆரணியில் உற்பத்தி செய்யப்படும் பட்டுச் சேலைகள் எடை மற்றும் விலை அதிகம். இச் சேலைகளை வசதி படைத்தோர் மட்டுமே வாங்க முடியும். தவிர, அந்தச் சேலைகளை வீட்டில் வைத்து பராமரிப்பதும் கடினம். இந்நிலையில்தான் 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஊருக்கே காமதேனுவாக விளங்கிய விஸ்கோஸ் ஆலை மூடப்பட்டது. பலர் ஊரை விட்டுச் செல்லவும் ஆரம்பித்தனர். வேறு சிலரோ தாம் ஏற்கெனவே அறிந்திருந்த கைத்தறி தொழிலில், குறிப்பாக பட்டு சேலை நெசவில் இறங்கினர். இப்படியாக பெருகிய கைத்தறிகள் ஒரு கட்டத்தில் நல்ல வளர்ச்சி பெற்றன.

அதன் நீட்சியாக சில ஆண்டுகளுக்கு முன்பு, முதன்முதலில் சிறுமுகையிலேயே கைத்தறியில் ‘சாஃப்ட் சில்க்’ எனப்படும் மென்பட்டு சேலைகள் நெய்யப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டன. மிக மெல்லிய தரமான பட்டு நூலைப் பயன்படுத்தி, வியக்கத்தக்க டிசைன்களோடு முற்றிலும் மனித உழைப்பால் வெகு நுணுக்கமாக நெய்யப்பட்ட இந்தப் பட்டு ரகங்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக பெரும் வரவேற்பு... இதன் விலையும் ரூ.1,500 முதல் என குறைந்த விலையில் கிடைப்பதால், இன்றைய இளம் பெண்கள் மென்பட்டு சேலைகளையே விரும்பி வாங்கியதால், திருமண பட்டுப் புடவைகளில் நுகர்வோர் விரும்பினால் மணமகன் மற்றும் மணமகள் உருவங்களை தத்ரூபமாக இவர்கள் நெய்தும் தருவதால், ஆண்டுதோறும் இதன் விற்பனை பல மடங்கு அதிகரித்தது. அந்த வகையில், சிறுமுகையில் உள்ள 17 கைத்தறி நெசவு கூட்டுறவு உற்பத்தி சங்கங்கள் மூலம் மட்டும் கடந்த ஆண்டுகளில் தீபாவளி பண்டிகைக்கு ரூ.60 முதல் ரூ.100 கோடி வரை மென்பட்டு சேலை ரகங்கள் வர்த்தகம் ஆகியிருக்கின்றன.

ஆனால், கடந்த ஆண்டு கரோனா காரணமாக மற்ற தொழில்கள் போலவே இந்தத் தொழிலும் வெகுவாக பாதிக்கப்பட்டது. உற்பத்தியே பாதியளவு குறைந்து விட்டது. உற்பத்தியான சேலைகளிலும் 50 சதவீதமே விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர். இந்த ஆண்டும் செப்டம்பர் வாக்கில் கரோனா 3-வது அலைக்கு வாய்ப்பு உண்டு என்று சுகாதாரத் துறையினர் எச்சரித்து வரும் நிலையில், தீபாவளி விற்பனை என்ன ஆகுமோ என்ற அச்சம் நெசவாளிகள் மனதில் இழையோடுவதை காண முடிகிறது.

எப்பொழுதும், சிறுமுகை நெசவாளர்களால் தயாரிக்கப்படும் பட்டுரகங்களை 50 சதவிகிதத்துக்கு மேல் தமிழக அரசின் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் கொள்முதல் செய்து வருகிறது. அது இந்த முறை கூடுதலானால், ஓரளவு பாதிப்பிலிருந்து நெசவுத் தொழிலாளர்கள் மீள முடியும் என கருத்துத் தெரிவிக்கின்றனர்.

x