நிழற்சாலை


சாமியாட்டம்

மற்ற நாட்களில்
பூட்டப்பட்ட அறைக்குள்
வைக்கப்பட்ட மாரியம்மன் சிலையை
கதவிடுக்கில்தான்
பார்த்துக்கொள்வோம்
ஆடி மாதமென்றால்
ஜிகினா பேப்பர்களால்
மீசைக்கார தாத்தா அலங்கரித்த
அம்மன் சிலையைத் தூக்கி
ஊரே சாமியாடும்.
இக்பால் வீட்டு வழி சிலை செல்லும்போது
மும்தாஜ் பாட்டி கையெடுத்து கும்பிட்டு
சிலை மேல் வீசும் சில்லறைக்கும்
வீட்டுக்கு வீடு சிலை செல்லும்போது
கொடுக்கப்படும் சர்க்கரை பானகத்திற்கும்
அதன் பின்னாலேயே அலைவோம்.
பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு
இப்போதுதான்
சிலையைத் தூக்கி சாமியாடவிருக்கிறார்கள்.
இறந்துவிட்ட
மீசைக்கார தாத்தா
வெளியூர் சென்றுவிட்ட
மும்தாஜ் பாட்டி
சாணி தெளிக்க அவசியமற்ற
கான்கிரீட் வீதி என நிறைய மாற்றங்கள்
கூடவே
முற்றிலும் கடவுள் மறுப்பிற்கு
மாறிப்போன நான்!

- ச.ஜெய்

***

நிறைவேற்றம்

கசாப்புக் கடை ஆடு
ஆத்தா கோயிலில்
ஆடுகிறது
தட்டில் சிரிக்கும்
புத்தாடையில்
மஞ்சள் ஒட்டு
கிராப்பு தலைமுடி
உதிர ஆரம்பிக்கிறது
நாற்பது பக்க நோட்டு
காத்திருக்கிறது
பங்காளிகள் வாங்கிய
பானங்கள் இலைமறைவில்
பங்கிடப்படுகிறது
வெட்டப்பட்ட ஆடு
வெந்துபோனது அடுப்பில்...
வயிறு புசித்து ஏப்பமிட
சாமி கும்பிடு
நிறைவேறுகிறது.

- ஞா.முனிராஜ்

***

குசலம்

என்னா வெயிலு...
கொரானா மூன்றாம் அலை
குழந்தைகளை ரொம்பவும் பாதிக்குமாமே!
எல்லா விலைகளையும்
ஏகத்துக்கும் ஏத்திட்டாங்க...
நம்ம காலத்தில் பெட்ரோல்
இந்த விலையா வித்துது!
எல்லா பிரச்சினைகளையும் அலசி ஆராய்ந்தார்கள்...
இறுதியாக  ‘என்ன இவ்வளவு தூரம்?'
என்று வந்து விழுந்த கேள்விக்கு
‘அவசரமாக கொஞ்சம் பணமுடை'
என்று வந்த வார்த்தைகளை
அவசரமாக விழுங்கியபடி
‘சும்மாத்தான் வந்தேன்'
அனிச்சையாக சொன்னது வாய்.

-கீழை அ.கதிர்வேல்

***

நெத்தியடி

புழங்குவது நோட்டெனினும்
ஈமச் சடங்கிற்கு நாணயமே...
புரண்டெழுவது கரன்சியாயினும்
அடங்கியபின் நெற்றிக் காசே...
வீதியில் அநாதையாய் இறந்தாலும்
வங்கியில் லட்சங்கள் கிடந்தாலும்
அரைஞாண் கயிறும் மிஞ்சாது!
ஏழையா ஆராய்ச்சி அநாவசியம்
குழம்பாதீர் ஈகை புரிவதில்
ஆதலின் சுரக்கட்டும் இரக்கம்.

-பி.பழனி

***

அஞ்சலி

கடன் வாங்கி
வட்டி கட்ட முடியாமல்
கயிற்றில் தொங்கியவனின்
கண்ணீர் அஞ்சலி
போஸ்டர் அருகேதான்
ஒட்டப்பட்டிருக்கிறது
குறைந்த வட்டிக்குக்
கடன் தருவதாகச் சொல்லும் நோட்டீசும்!

- திருமயம் பெ.பாண்டியன்

***

ஓவிய முகம்

பார்ப்பதையெல்லாம்
வரையத் தொடங்கிவிடுகிறாள்
தீபதர்ஷினி குட்டி.
அவள் வரைய முனைவதை
ஒத்திருப்பதில்லை
அவள் வரையும் ஓவியம்.
சிலநேரம் அதைவிட
அழகாகவும் அமைந்துவிடுவதுண்டு.
ஒருமுறை என்னை
வரைந்து காண்பித்தாள்
புகைப்படத்தை அப்படியே
நகல் எடுத்துவிட்ட
பூரிப்பை முகம் முழுதும்
ஓவியமாய்த் தீட்டிக்கொண்டு.
அதைக் கலைக்க
மனமில்லாமல்
என் முகமல்லாத முகத்தை
ஏற்றுக்கொண்டேன்
என் முகமாக.

- வீ. விஷ்ணு குமார்

***

சிறப்பு ழகரமான கனவுகள்

திருமணத்தின் வாசலில் ஒவ்வொன்றாக
ஊற்றி மனதை நிரப்புகிறாள்
பிறந்த வீட்டில் நிராசையாய் நின்ற
கனவு லட்சியங்களெல்லாம்
ஒன்றின் மேல் ஒன்றாக ஊற்றி
எல்லாவற்றாலும் நிறைந்துபோன
முழு மனதில்...
கைகளுக்குள் அளந்தும்
கைகளுக்குள் அடங்கியும்
கைகளுக்குள்ளேயே கசங்கியும்
போய்விடும்
மாலை வேளைக்கான பூக்களே
பூர்த்திசெய்யப்பட்ட மனதின்
மேலடுக்கில் மிதக்கின்றன...
நீந்தத் தெரிந்தவர்களுக்கெல்லாம்
முத்துக்குளிக்கத் தெரிந்திருப்பதில்லை
கனவுகளெல்லாம் வண்ணக் காட்சிகளாகும்
எண்ணத்தில் காலத்தின் மீதே
படையெடுக்க முற்படுகிறாள்
கனவோ மனதின் ஆழத்தில்
சிறப்பு ழகரத்தை விடவும்
ஆழமாய்ச் சிக்கிக் தவிக்கிறது...

-நல முத்துகருப்பசாமி

***

சட்டை

அப்பா
கோ - ஆப்டெக்ஸில்
ஒட்டுமொத்த குடும்பத்திற்கும்
ஒரே மாதிரி சட்டைத்துணி வாங்குவார்.
பாலிடெக்னிக் படிக்கும் அண்ணன்
பழசெனத் தவிர்க்கும் சட்டைகளையே
பெரும்பாலும் விரும்பி
போட்டுக்கொள்வேன்.
விடுமுறைக்கு வீட்டுக்கு வரும்
சின்னக்கா
என்ன கலர் சட்டை வாங்கிவந்தாலும்
எனக்குப் பிடித்தேயிருந்தது.
“என்னப்பா
ஒரு சட்டைகூட
செலக்ட் பண்ணத்
தெரியலையே” என
கோபப்படும் மகனிடம்
எப்படிச் சொல்வேன்
சட்டையில்லை
ஒரு கைக்குட்டைகூட
எனக்காக நான்
வாங்கிக்கொண்டதில்லையென.

-காசாவயல் கண்ணன்

***

உலகப்படம்

அணுகுண்டு
ஹைட்ரஜன் குண்டு
கண்டம்விட்டு
கண்டம் பாயும் ஏவுகணை
அலைகளாகும் வைரஸ்
வார்த்தைகளில் தெரியும்
உலக வரைபடத்தில்
மீண்டும் தடம்பதிக்க
இடம் தேடுகிறது அகிம்சை.

- அய்யாறு ச.புகழேந்தி

***

ஞானம்

தான் வீடடையும்
முன்பாகக்
குருவிகளைக்
கூடு சேர்க்கவென
மெதுவாகவே
மலை சேர்கிறது
கதிர்

* * *
பல நூறு ஆண்டுகளாகின
ஞானமடைந்து
இன்னும் எழுந்துகொள்ளத்
தோன்றவில்லை புத்தனுக்கு.

- கி.சரஸ்வதி

x