கேட்கல... கேட்கல... சத்தமா... ஆன்லைன் கிளாஸ் அலப்பறைகள்!


கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

`கரகாட்டக்காரன்' படம் கூட தியேட்டர்லதான் ஒரு வருஷம் ஓடுச்சு. ‘ஆன்லைன் கிளாஸ்', ஒவ்வொரு வீட்லேயும் ஒரு வருஷத்தத் தாண்டி ஓடுது... ஓடுது... ஓடிக்கிட்டே இருக்குது. இந்த வருஷத்தோட ஆகச்சிறந்த காமெடி படம்னா, அது நம்ம பசங்களோட ஆன்லைன் கிளாஸ் தானுங்க. ஆன்லைன் கிளாஸ் ஒரு நாடக மேடைன்னா, அதுல நாமெல்லாம் நடிகருங்க.

டீச்சருக்கு வேணுமின்னா காலைல ஒன்பதரைக்கு ஆன்லைன் கிளாஸ் ஆரம்பிக்கலாம். ஆனா, பெத்தவங்களுக்கு ஏழரைக்கே(?!) ஆரம்பமாகிடும். ஸ்கூலுக்கு கிளப்புற மாதிரியே பசங்களுக்குப் பல் விலக்கி, டாய்லெட்குள்ள அனுப்பி, குளிக்க வெச்சு, பவுடர்லாம் அடிச்சி, டிபன் ஊட்டி, கேமரா முன்னாடி உட்கார வெக்கணும். சில ஸ்கூல்ல யூனிஃபார்ம் கூட போடச் சொல்றாய்ங்க.
ஒழுங்கா ஸ்கூல் போயிட்டு இருந்த காலத்துல எல்கேஜி பொண்ணு கூட, “அம்மா நானே கிளம்பிக்கிறேன். எங்க மிஸ் நானேதான் குளிச்சி, டிரஸ் பண்ணி ஸ்கூல் கிளம்பணும்னு சொல்லிருக்காங்க” அப்டின்னு சமத்தா சொல்லியிருக்கும். அதெல்லாம் லாக்டவுனுக்கு முன்னால. இப்ப, ஆன்லைன் கிளாஸ் என்றதும் 8-ம் வகுப்பு படிக்கிற குட்டிப் பிசாசே 8 மணிக்குத்தான் எந்திருக்குது. வாய்கூட கொப்புளிக்காம மூஞ்சக் கழுவாம ஆன்லைன் கிளாஸ்ல லாகின் பண்ணிட்டு, வழக்கம்போல அட்டென்டன்ஸ் மட்டும் போட்டுட்டு வீடியோவை ஆஃப் பண்ணிட்டு தூக்கத்தை கன்டினியூவ் பண்ணுதுங்க. பெத்த கடமைக்கு பாடத்தை பேரன்ட்ஸ்தான் கேட்கணும்.

“இந்தத் தில்லாலங்கடி எல்லாம் எங்கிட்ட ஆகாது. எல்லாரும் வீடியோ ஆன் பண்ணணும்’’னு டீச்சர் சொன்னா,
ஜடம் மட்டும்தான் கேமரா முன்னாடி இருக்கும். நாடி, நரம்பு, புத்தி, கித்தி எல்லாம் எதிர்ல ஓடுற டிவியிலதான் இருக்கும். மிஸ் கேள்வி கேட்டா ஒருத்தனும் பதில் சொல்ல மாட்டான். யாராவது ஒருத்தன் பதில் சொல்லி மிஸ் அவனை, “வெரி குட் டா செல்லம்’’னு சொல்ல, அவன் பதிலுக்கு “தேங்க் யூ மிஸ்” சொல்வான் பாருங்க. அப்போ, டக்குன்னு இந்த ஜடங்களுக்கெல்லாம் உசிர் வந்து, வரிசையா எல்லாரும் “தேங்க் யூ மிஸ்”னு சொல்லிட்டு கூகுள் மீட்டை விட்டே வெளியே போயிடுவாங்க.

“அடேய், கிளாஸ் ஆரம்பிச்சே 10 நிமிஷம்தாண்டா ஆச்சு. இன்னும் முடியல. போகாதீங்க போகாதீங்க”ன்னு மிஸ் கதறுறது யார் காதுலேயும் விழாது. ஒவ்வொரு கிளாஸ்லயும் ஒருத்தன் இருப்பான். பெரிய பிகிலு விஜய்னு நினைப்பு. மிஸ் பாடம் நடத்துறப்ப, “கேக்கல... கேக்கல... இன்னும் சத்தமா...”னு டீச்சருக்கு உத்தரவு போட்டுக்கிட்டே இருப்பான் பய.

பேரன்ட்ஸ் மேற்பார்வையில கிளாஸ் கவனிக்கிற பசங்க மட்டும்தான், வேற வழியில்லாம பாடத்தைக் கவனிப்பாங்க. அதுலயும் சில பேரன்ட்ஸ் இருக்கிறாங்க, “பதில் சொல்லுடா... பதில் சொல்லுடா”ன்னு மிஸ்ஸவிட அவங்க மிரட்டுறதுதான் அதிகமா கேட்கும். நம்ம மாதிரி அப்பாவி பேரன்ட்ஸ், வீடியோல தலையக் காட்டாம இருக்கிறது உடம்புக்கு நல்லது.  2-ம் வகுப்பு படிக்கிற என்னோட மகனை மேற்பார்வையிடும் பொறுப்ப என்கிட்ட வீட்டம்மா ஒரு நாளு ஒப்படைச்சாங்க. காலை 9.35. செல்போனைத் தூக்கிட்டு குடுகுடுன்னு ஓடியாந்த சின்னவன், ஆன் லைன் கிளாஸ் ஸ்கிரீனைக் காட்டி, “இது யாரு?”ன்னு கேட்டான். “காமராஜர்”னு நான் சொல்லிக் கொடுத்துக்கிட்டு இருக்கும்போதே, இன்னொரு பையன் விடையச் சொல்லிட்டான். பையனுக்கு பெருத்த ஏமாற்றம். பிடிச்ச மிஸ் வேற (எனக்குந் தான்). அடுத்த கேள்விக்கு பதில் சொல்லி அசத்த ஆயத்தமாகிட்டான்.

“இவரைப் பற்றி சொல்லுங்க பாப்போம்” என்று மிஸ் கேட்டு முடிக்கும் முன்பே, “ராகுல் காந்தியோட தாத்தா...” என்று சொன்னாம் பாருங்க, மிஸ் விழுந்து விழுந்து சிரிச்சாங்க. பிள்ளைங்களும் கோரஸா சிரிச்சாங்க. விடை தப்புன்னு தெரிஞ்சதும் கையில புத்தகத்தைக் கொடுத்து, “அந்தப் பக்கத்தை எடுங்கப்பா”ன்னு கண்ணாலேயே கோபமா உத்தரவு போட்டான் பையன். நானும் வேகமா புத்தகத்தைத் திருப்பினேன். அதப் பாத்து மறுபடியும் விழுந்து விழுந்து சிரிச்சாங்க டீச்சர்.

“பிள்ளைங்க அவங்களே ஆன்ஸர் சொன்னாக்கூட சரியாச் சொல்வாங்க போல. சில பேரன்ட்ஸ் தப்புத்தப்பா சொல்லித் தர்றீங்க. சந்துரு அப்பா புத்தகத்தைப் புரட்டுறாரு. இன்னிக்கு காமராஜர் பிறந்த நாள் - கல்வி வளர்ச்சி நாள், சரியா? அதனாலதான் அவரைப் பற்றிப் பேசுறேன். அதனால யாரும் புத்தகத்துல பாடம் இல்லியேன்னு தேட வேணாம்”னு சொல்லிட்டு மறுபடியும் சிரிப்பு.

“அடேய்... மை சன்... இனிமே மை டீச்சர் முகத்துல நான் எப்படிடா முழிப்பேன்?”ன்னு உள்ளுக்குள்ள நான் அழுதது யாருக்கும் தெரியாது. எங்க அண்ணன் பையன் இவனை மாதிரில்லாம் இல்ல. ரொம்ப நல்லவன். சித்தப்பா எங்க இங்கிலீஸ் மிஸ்ஸ பார்த்தீங்களான்னு ஸ்கிரீன் ஷாட் எடுத்து போட்டோவ எனக்கு அனுப்பி வெப்பான். ஆன்லைன்லயே யோகா கிளாஸ் நடத்துறப்ப நடக்குற வேடிக்கையை எல்லாம் பார்த்தீங்க... சிரிச்சி சிரிச்சே சுளுக்குப் பிடிச்சுக்கும் சுளுக்கு.

ஸ்கூல் பசங்களே இப்படின்னா காலேஜ் பசங்கள கேட்கவும் வேணுமா? கிரிக்கெட் ஆடிக்கிட்டே கிளாஸ் அட்டன் பண்றது, பார்ட்டைம் வேலை பார்த்துக்கிட்டே கிளாஸையும் பார்க்கிறது, மியூட்ல போட்டிருக்கோம்னு நினைச்சுக்கிட்டே, “இந்த வாத்தியானுக்கு வேற வேலைப் பொழப்பே இல்லியா? காலையில 10 மணியாகிட்டா வந்துடுறான்யா” என்று திட்டிட்டு “அச்சச்சோ” என்று மியூட் போடுவது. வாத்தியாரும் காதுல விழாதது மாதிரியே பாடம் நடத்துறதுன்னு அது ஒரு திணுசா போகும்.

சில கெட்டிக்கார வாத்தியாருங்க வீடியோவை ஆன் பண்ணி வெச்சிட்டு கிளாஸை கவனின்னு கட்டாயப் படுத்துவாங்க. இருக்கவே இருக்கு மல்ட்டி ஸ்கிரீன் ஆப்ஷன். நம்மாளு இன்னொரு ஸ்கிரீனை ஓப்பன் பண்ணி படம் பார்க்கிறது, வாட்ஸ்அப்ல சாட் பண்றது, சோஷியல் மீடியாவுல மேயுறது, கேம் ஆடுறதுன்னு புகுந்து விளையாடுவான். புள்ள ஆன்லைன் கிளாஸ்லயே எவ்வளவு கவனமா இருக்காம் பாருன்னு வாத்தியாரும், பெத்தவங்களும் ஏமாந்து போயிடுவாங்க.

அதோட நிப்பாட்டிட்டா பரவாயில்ல. நம்ம பயலுக வாத்தியாரோட ஸ்கிரீனை சின்னதாக்கிட்டு வகுப்பை கவனிக்கிற பொண்ணுங்களோட சேட்டையை ரசிப்பாங்க. அந்தப் பொண்ணு கொட்டாவி விட்டாக்கூட, “உன் கொட்டாவி கூட அழகாக இருக்கிறதேன்’’னு சாட்டிங்லயே கவிதை வாசிப்பானுங்க. “பின்னாடி நைட்டி போட்டு போறாங்களே அதுதான் எங்க அத்தையா?”ன்னு கேட்கிற கூத்தும் நடக்குது. சில கோஷ்டிங்க கூட்டிக்கிட்டு ஓடுன கூத்தும் நடந்ததா புள்ளிவிவரங்கள் பதிவாகியிருக்கு.

மதுரை லேடீஸ் காலேஜ்ல நம்ம அக்கா ஒருத்தங்க பேராசிரியரா இருக்காங்க. அவங்க காலேஜ் ஸ்டாஃப் ரூம்ல உட்கார்ந்து ஆன்லைன் கிளாஸ் நடத்துனப்ப, பின்னாடி இன்னொரு ஸ்டாஃப் ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு சொல்ல, இவங்க மியூட் போட்டுட்டு என்ன விவரம்னு கேட்டிருக்காங்க. அப்புறம் பாடம் நடத்த ஆரம்பிச்சிட்டாங்க. அரை மணி நேரம் கழிச்சித்தான் பார்த்திருக்காங்க, மியூட்டை எடுக்கவே இல்லன்னு. “அடியேய் எவளாச்சும் ஒருத்தி போன் பண்ணிச் சொல்லிருக்கலாம்ல, அட்லீஸ்ட் டெக்ஸ்டாவது பண்ணியிருக்கலாம்ல”ன்னு கேட்டதுக்கு, “எதோ நெட்வொர்க் பிராப்ளம்னு நினைச்சிட்டோம் மேம்’’னு பதில் சொல்லியிருக்குதுங்க பொண்ணுங்க. இரக்கமேயில்லையாப்பா உங்களுக்கு?

இந்த ஆன்லைன் கிளாஸுக்கு 50 ஆயிரம், 60 ஆயிரம்னு ஃபீஸ் கேட்கிற ஸ்கூல்ஸும் இருக்குது. அதையும் ஓடிஓடி கட்டுற பேரன்ட்ஸும் இருக்காங்க. மற்றதை எல்லாம் கூட சகிச்சுக்கலாம். மதுரையில ஒரு ஐசிஎஸ் (இன்டர்நேஷனல் சிலபஸ்) ஸ்கூல்ல 4-ம் வகுப்பு படிக்கிற பய, “அங்கிள் இன்னைக்கு நாங்க மைசூர் ஸூவுக்கு ஃபீல்ட் விசிட் பண்றோம்” என்றான். “என்னடா சொல்லுற?”ன்னு கேட்டேன். ஜூம் மீட்டிங் வழியா ஸூவ காட்டுவாங்களாம். அடேய்... இதுக்கு உங்க அப்பன்கிட்ட எவ்வளவு காசை புடுங்குனாங்கன்னு தெரியலியே!

x