இதையும் குடிங்க கணக்கு சரியா போயிரும்!


ரிஷபன்
rsrinivasanrishaban@gmail.com

எப்பவுமே ஆபிஸ் விட்டு வீடு திரும்பும்போது மனசுக்குள்ர கொஞ்சம் பக் பக்னுதான் இருக்கும், செகரட்டரி ஆஃப் திஸ் அபார்ட்மென்ட்ங்கிறதால.

ஏதாச்சும் வெட்டிப் புகாரோடு காத்திருப்பாங்க. நேற்றும் ஒருத்தர் வழி மறிச்சார். ஃப்ளாட்டின் பின்பக்கம் கூட்டிக்கிட்டுப் போய் ஒரு நெகிழிப்பை சாக்கடையை அடைச்சுருந்ததைக் காட்டுனாரு.

“மூணு நாளா இப்படியே இருக்கு. என்னத்த க்ளீன் பண்றாங்க. மெயின்டனன்ஸ் சார்ஜ் வாங்கறீங்க தானே. சுத்தம் முக்கியம் இல்லியா”னு லெக்சர் அடிச்சாரு.

எதுவும் பேசாம குனிஞ்சு இடது கையால் நெகிழிப் பைய எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டு கையக் கழுவுனேன்.
அண்ணனுக்கு ஷேம் ஆயிருச்சு. மீசைல மண்ணு ஒட்டாத மாதிரி அடுத்த ராக்கெட்டை விட்டார்.
“நீங்க எடுக்கறதோ நான் எடுக்கறதோ முக்கியமில்ல. அப்புறம் அவ எதுக்கு வேலைக்கு. உங்ககிட்ட காட்டணும்னுதான் அப்படியே விட்டுருந்தேன்.”

சவடாலா பேசுனார். “அடைச்சுக்கிட்டதால வழிஞ்சு நடக்கிற இடமெல்லாம் சாக்கடைத் தண்ணி. பொறுப்பே இல்ல”ன்னு மூச்சே விடாமப் பேசுனாரு.

எனக்கோ நாள் முழுக்க ஆபிஸ்ல ஸ்டோர் யார்டுல ஸ்டாக் வெரிஃபிகேஷன். அலைஞ்சுட்டு வந்ததுல உடம்பெல்லாம் கசகசன்னு அரிப்பு. குளிச்சாத்தான் ஃப்ரெஷ் ஆவேன்னு தவிச்சுகிட்டுருந்தேன். சமாதானமாப் போவலாம்னா இவரு விட்டாதானே.
இப்போ காத்து அடிச்சு குப்பை சேர்றது சகஜம். இதெல்லாம் சொன்னால் பேச்சு வளரும். சரி சரின்னு தலையாட்டுனேன். எத்தனை வருசப் பழக்கம், கல்யாணமானதிலிருந்து !

அவரு பெரிய மனசு பண்ணி விட்டுட்டு போனதும் அடுத்த ஆள் பிடிச்சுக்கிட்டாரு. மொத மாடில பொது விளக்கு எரியலியாம். மாடிக்கே இழுத்துக்கிட்டுப் போய் “இது சுவிட்சா... இது லைட்டா. போட்டா எரியல பாருங்க”னு டெமோ காட்டுனாரு. ஃப்யூஸ் போய் ஒரு வாரம் ஆச்சாம். நேரம்டா சாமின்னு எனக்கு நானே நொந்துக்கிட்டேன்.

“உன் வீட்டு வாச லைட்டைப் போட மாட்டியா”ன்னு ஒரு தடவை எதார்த்தமா கேட்டு வைக்க, தாம்தூம்னு குதிச்சாரு. “கரன்ட் பில்லை உன் அப்பனா கட்டுவான்”னு எங்க அப்பாவைக் கூப்பிடவும் அரண்டு போயிட்டேன்.

“ஒரு அவசரத்துக்கு சேஃப்டிக்கு போடச் சொன்னேன்... தெனமும் இல்லை”ன்னு நான் என்னதான் விளக்கம் கொடுத்தாலும் சாமி மலை எறங்கல.

அப்புறம் அவரோட மாமி வந்து, “ஒங்களுக்கு அறிவே இல்லை... ஊர்வம்பு எதுக்குன்னு சொன்னாக் கேட்டாத்தானே”ன்னு மரியாதையா (!) சொல்லி இழுத்துக்கிட்டு போனதும் தான் தப்பிச்சேன்.

அப்புறம் நானே பல்ப் வாங்கிக்கிட்டு வந்து ஏணியைப் போட்டு கால் நடுங்கிக்கிட்டே ஏறிப் போட்டேன்.

நம்ம வீட்டுக்குப் போவறதுக்குள்ர எத்தனை டோல் தாண்ட வேண்டியிருக்குன்னு ஒடம்பு உதறுச்சு.

படியேறி ரெண்டாவது மாடிக்கு வந்தா... அம்மு. அதாங்க அம்மிணி. செல்லமா சொன்னா திட்டு வாங்கறது குறையும்னு அசட்டு நம்பிக்கை.

என்னைப் பார்த்ததும் “கீழே என்ன பஞ்சாயத்து இவ்ளோ நேரமா”ன்னு அதட்டுனாங்க. மேலே நின்னு சிஐடி வேலை பாத்துருப்பாங்க போல.

வெவரமா எல்லாத்தியும் சொன்னேன். சொல்லும்போதே அவங்க முகம் சீரியல்ல வர மாமியா மாதிரி மாறிகிட்டே இருந்துச்சு. அதைப் பாக்கப் பாக்க ஒடம்பு இன்னும் உதறுச்சு.

“சாக்கடையில எல்லாம் கையை ஓட்ட வேண்டியது... அப்புறம் பத்து வித ஸ்கின் ப்ராப்ளம்”னு கத்துனாங்க.
“வழி மறிச்சு வம்பு பண்றவர்ட்ட வேற என்ன செய்ய”னு கெஞ்சுனேன்.

“அதான் பார்த்தேனே. பேசுனதை விட சொரிஞ்சுக்கிட்டே நின்னீங்களே”ன்னு பாயின்ட்டுக்கு வந்தாங்க.

எப்போ சொரிஞ்சோம்னு யோசிச்சேன்.

யோசிக்கும் போதே என் கை என்னையும் அறியாம அனிச்சையா முதுகை.. காலை.. கையைன்னு உடம்பு முழுக்க பிடில் வாசிச்சுது.
எங்க கம்பெனி யூனிஃபார்ம் அவ்வளோ லட்சணம். கெட்டித் துணி. கிழியவே கிழியாது. காத்துப் போகாம பேக் பண்ணாப்ல இருக்கும். நாள் முழுக்க அதுலேயே அடைஞ்சு கிடப்போம். எப்போ வீட்டுக்கு திரும்புவோம்... கழட்டி எறிவோம்னு இருக்கும்.
எதிர் வீட்டு தாத்தா சம்மன் இல்லாமலேயே ஆஜரானார். என்னைத் திட்டறதுன்னா அவருக்கு ரொம்ப குஷி.

“நானே பார்த்திருக்கேன்... வறட்டு வறட்டுன்னு எருமை மாடு சொவத்துல தேய்ச்சுக்கிற மாதிரி சொறிஞ்சுப்பார்”னு நல்லாவே ஏத்தி விட்டார்.

அதுக்குள்ர முதல் மாடி மாமி மேலே வந்தாங்க. அவங்க கையில் ஒரு புல்லுக் கட்டு.

“மாமாக்கு (!) இதை அரைச்சு கார்த்தால வெறும் வயித்துல கொடுங்கோ... பிரதோஷத்துக்குன்னு வாங்கி வச்சேன்.”
அருகம்புல் கட்டை நீட்டினார். மாட்டுக்கு வாங்கியதுன்னு மனசுக்குள்ளயே நினைச்சு நமுட்டலா சிரிச்சுக்கிட்டே கொடுத்தார்.
குளிக்கும்போது ரெண்டு தடவை சோப் போட்டேன். இன்னொரு பக்கெட் தண்ணியக் காலி செஞ்சேன்.

பிரிக்லி ஹீட் பவுடரைத் தரைக்குப் பாதி... உடம்புக்குப் பாதி கொட்டிக்கிட்டு படுத்துட்டேன். படுத்ததும் தூங்கியாச்சு.
அஞ்சு மணிக்கு எந்திரிச்சு குளிச்சுட்டு கிச்சனுக்கு வந்தா ஸ்டவ் மேல மூடி போட்ட டம்ளர் இருந்துச்சு.

ஹா... அருகம்புல் ஜூஸ். அம்மிணி... நீ தேவதை... இன்னும் எத்தனை ஜென்மா எடுத்தாலும் நீதான்னு புல்லரிச்சு... மூடியைக் கடாசிட்டு உள்ள என்ன இருக்குன்னுகூட பாக்காம மடக் மடக்குனு விழுங்குனேன்.

ஏன் கசக்குது... ஓ... அருகம்புல் ஜூஸ் கசக்குமோ... டம்ளரை மேடைல வைக்கக் குனிஞ்சா இன்னொரு டம்ளர்ல பச்சைத் திரவம் இருந்துச்சு. அப்போ நான் குடிச்சது ?

அம்மிணி உள்ளே வந்தாங்க.

“இங்க மூடிவெச்சிருந்த டிகாஷன் என்னாச்சு”ன்னு கேட்டாங்க. ஙே...னு முழிச்சேன்.

மென்னு விழுங்கி நான் குடிச்சதை தடுமாறிகிட்டே சொன்னேன். “அவுதிப்பட்டாளம் நீங்க”ன்னு கமென்ட் அடிச்சாங்க சிரிச்சுகிட்டே.
“டிகாஷன் குடிச்சா என்ன ஆகும்”னு கவலையாக் கேட்டேன். அடி வயிறு கலங்கிக்கிட்டு இருந்துருச்சு.

ஒரு டம்ளர் பால்... சர்க்கரை டப்பாவை எதிர்ல டொக்குனு வச்சாங்க.

“இதையும் குடிங்க. கணக்கு சரியாப் போயிரும்”னு கூலா சொல்லிட்டு ஹிண்டுவைப் படிக்கப் போய்ட்டாங்க அமைதியா!

x