நிழற்சாலை


அன்பின் அடுப்படி

தெருநாய்களை பார்த்தால்
விரட்டுவார் அப்பா
அம்மாவுக்குச் சற்று பிரியமுண்டு
துருவின் நிறமுடைய நாயொன்று
அவ்வப்போது வாசல் வந்து நிற்கும்
'ரஸ்டிக்' என்றதற்குப் பெயரிட்டிருந்தாள்
மீதமாகும் சாப்பாட்டை
இரவில் தினமும் போடுவாள்
நன்றி தெரிவிக்கும் செயலாகவோ
தனது வீடு என்று பறைசாற்றவோ
செரித்த உணவை வாசலில்
அது கழித்துவிட்டுப் போகும்
‘தெருநாய்க்கு சாப்பாடு
போடாதேன்னா கேட்டாத்தானே’
என்ற புலம்பலோடுதான்
அப்பாவின் பொழுது விடியும்
'குப்பையில கொட்டறதைதானே போடறேன்'
அம்மாவும் அங்கலாய்ப்பாள்.
கனரக வாகனத்தால் மிதிபட்டு
ரஸ்டிக் இறந்துபோன அன்று இரவில்
மீதமில்லாத சாப்பாடு பாத்திரத்தை
பார்த்தபோதுதான் புரிந்தது
அதற்கும் சேர்த்துதான்
அம்மா சமைப்பாள் என்பது.
- அஜித்

இரவின்மீது நீந்துதல்

என் தொட்டியுள் அலையும்
தங்க மீனினை
கடலில் விட ஆசையென சொல்லிச்சென்றாய்
சமுத்திரம்
சற்றே பெரிய தொட்டி
எனவும்
அது நீந்தி கடந்திடக்கூடியது
எனவும்
சொல்லிச்சொல்லித்தான்
நான்
எனது மீனை வளர்த்திருக்கிறேன்
நீ போன பிறகான இரவில்
என் அறை அதற்குக் கடலாகவும்
அதன் தொட்டி
என்னால் நீந்திட முடியாத ஒரு தொட்டியாகவும்
மிக இயல்பாக
மாற்றம்கொண்டுவிடுகிறது
இப்போது
எனது அறை ஒரு கடலாக மாறிவிட்டது
நானோ அதன் நீராக அலைமோதுகிறேன்
நானும் எனது தங்கமீனும்
நீந்தியே
கடக்க முயற்சிக்கிறோம்
கடக்கவியலாத அந்தக் கடலை...
- சுரேஷ் சூர்யா

x