ராசி அழகப்பன் கவிதை


காதலின் கடவுச் சீட்டு!

நுரை தள்ளிய கனவிலிருந்து
காதல் கையசைக்கிறது.
ஒருமுறை பட்டம் விடும்போது
தூரநின்று வேடிக்கை பார்த்த
நண்பனின் கடலை மிட்டாய்
என் வகுப்புக் காதலை நொறுக்கியது.
வேறொரு முறை -
நடந்துபோன இரட்டை ஜடையை
வாடகை சைக்கிளெடுத்து -
நண்பன் பின்னடையச் செய்தான்.
கல்லூரிக் காலத்தில் -
சொற்களை ரசித்த சூட்சுமக்காரி
புதிய படத்தின்
முதல் காட்சி டிக்கெட்டில்
என்னைக் கிழித்துவிட்டாள்...
அலுவலக நேரத்தில் -
அச்சுக்கு அழகாய்ப் பேசிய
கவிதை முகங்கள் -
நண்பனின் நேரடிக் கைதட்டலில்
நசுங்கிப்போனது!
தாம்பரம் பேருந்தில்
தலைசாய்த்துப் பின்தொடர்ந்ததும் -
போட்டிகளில் கைகொடுத்த
தாவணிகளைக் கனவு கண்டதும் -
அத்தை மகளைப் பெண்கேட்ட சமயம்
எல்லாப் புலனுக்கும் புரிந்தது.
‘போக்கத்தவனுக்கு
பெண் ஒன்று கேடா’ என்பது.
கனவின் தரையில்
துழாவிக் கிடைத்த
அந்தரங்கச் சொற்களை
அழுக்கு ஆக்காமல் தருகிறேன்...
காமமின்றி காதல் இல்லை...
காதலில் காமம் இருப்பதும் தொல்லை.
இவையனைத்தும்
என்னுடைய நேற்றானது. 

*******

அயல்நாட்டில் உள்ள பிள்ளை

x