கடலோடிச் சமூகத்தின் கண்ணாடியாக ஒரு புத்தகம்!- திருமண மேடையில் மணமகளின் தித்திப்புப் பரிசு


என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

திருமண வைபவங்கள் இன்றைக்கு ரியாலிட்டி ஷோக்களுக்கே சவால் விடும் அளவுக்கு ஆடம்பரத் தன்மையை அடைந்திருக்கின்றன. திரைப்படப் பாணியில் ப்ரீ - வெட்டிங் போட்டோ ஷூட், நண்பர்களுடன் நடனமாடும் காணொலிகள் எனக் கொண்டாட்டத்தில் திளைப்பதையே இன்றைக்குப் பெரும்பாலான மணமக்கள் விரும்புகிறார்கள். இவர்களுக்கு மத்தியில் கடலோடிச் சமூகம் குறித்த பொதுச் சமூகத்தின் ஆழ்மனப் புரிதலை மாற்றி அமைக்கும் ஆயுதமாகத் தனது திருமணத்தைப் பயன்படுத்தியிருக்கிறார் பெனிட்டா லிஞ்சோ பொழில். இவர் எழுதிய ‘மீடியா மிஸ்ரெப்ரெஸன்டேஷன் Vs ரியாலிட்டி’ எனும் ஆங்கிலப் புத்தகம்தான் மணவிழாவுக்கு வந்தவர்களை மனங்குளிரச் செய்திருக்கிறது.

ஆம். குமரி மாவட்டம், குறும்பனை மீனவ கிராமத்தில் நடந்த பெனிட்டாவின் திருமணத்தின்போதுதான் இந்த அபூர்வம் நிகழ்ந்திருக்கிறது. முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் மணமேடையிலேயே புத்தகத்தை வெளியிட, எழுத்தாளர் ஜோ டி குருஸ் அதைப் பெற்றுக்கொண்டார்.

பெருமிதத்துக்குரிய பெண்

பல இலக்கிய ஆளுமைகள் கலந்துகொண்ட இந்த நிகழ்வைப் பார்த்த உள்ளூர்க் கடலோடிகள், “கடப்புற ஜனங்களுக்கு இது ஒரு பெருப்பமான (பெருமிதமான) விஷயம். இந்தப் பிள்ளையை பார்த்தாலே தெரியுது... இது கலியும், கலிக்கியாணமும் (கலையும், கலை ஞானமும்) நெறஞ்ச பிள்ளைன்னு...” என பெனிட்டாவைப் பற்றிப் பேசிக்கொண்டதைக் கேட்க முடிந்தது. கல்யாணப் பரபரப்புகளுக்கு மத்தியில் இருந்த மணமகள் பெனிட்டாவிடம் பேசினேன்.

“நான் சென்னையில் எம்.ஏ., இங்கிலீஷ் படிச்சேன். இப்போ தனியார் பள்ளிக்கூடத்தில் டீச்சரா இருக்கேன். பேராசிரியர் தகுதித் தேர்வு எழுதி பாஸாகியிருக்கேன். என்னோட அப்பா குறும்பனை பெர்லின் ஒரு சமூகப் போராளி. அவர் ஒரு எழுத்தாளரும்கூட. மீனவர்கள் பிரச்சினைகளில் அப்பா களத்திலும், எழுத்திலும் நிற்பார். அப்பாவைப் பார்த்து வளர்ந்ததால எங்க மீனவ மக்களோட வலியும், வேதனையும் எனக்கு ரொம்ப ஆழமாத் தெரியும். நான் எட்டாம் கிளாஸ் படிச்சுட்டு இருந்தப்போ கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் நடந்துச்சு. அப்பா அதைப் பத்தி வீட்டுல தொடர்ந்து பேசுவார். களத்துல நின்னு போராடியதுடன் அதைப் பத்தி நிறைய எழுதியும் இருக்கார். அப்போ, ‘நான் வளர்ந்து கலெக்டராகி அந்த உலையை மூடுவேன்’னு அப்பாகிட்ட சொல்லிருக்கேன். கலெக்டருக்குத்தான் பெரிய பவர் இருக்கும்னு நான் நினைச்ச காலம் அது. ஜனநாயகம், மத்திய - மாநில அரசுகள், அரசியல் பத்தியெல்லாம் அப்போ எனக்குத் தெரியாது.

குமரி கடற்கரை கிராமங்களில் பெருகிவரும் புற்றுநோய் பத்தி அப்பா ‘கதிகலக்கும் கதிரியக்கம்’னு ஒரு புத்தகம் எழுதினார். இப்படி மீனவ மக்களின் பிரச்சினை தருணங்களில் எல்லாம் அப்பாவின் புத்தகம் மலரும். அப்பாவோட முதல் வாசகியும் நான்தான். தொடர்ந்து அதையெல்லாம் வாசிக்க வாசிக்க… எனக்கு ஒரு முக்கியமான விஷயம் புரிஞ்சுது. கடலோடிகளின் வாழ்க்கை ஒருபுறம் இருக்கு. ஆனா, கடலுக்கு வெளியே இருக்கும் மக்களுக்கு மீனவ மக்களின் துயரும், அவர்கள் மனமும் தெரியிறது இல்லை. அப்போதுதான் இதில் எங்கே தவறு நடக்குதுன்னு யோசிச்சேன். வெகுசில ஊடகங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் மட்டுமே கடற்கரைச் சமூகம் குறித்த புரிதல் இருக்கு. பெரும்பாலான ஊடகவியலாளர்களும் பொதுச் சமூகமும் மீனவர்களைத் தவறான புரிதலோடு உள்வாங்கிக்கிறாங்கன்னு எனக்குத் தோணுச்சு.

சரியான புரிதலுக்கான முயற்சி

அப்பாவின் ‘கடல் அடி’ என்னும் நாவலைப் படிச்சதுதான் என் வாழ்வின் திருப்புமுனை. அதைப் படிச்சிட்டு அதை அடிநாதமாகக் கொண்டுதான் இந்தப் புத்தகத்தை எழுதினேன். இது கடலோடி சமூகத்தின் மீது தொடர்ந்து திணிக்கப்படும் களங்கத்தைத் துடைக்க என்னாலான சிறு முயற்சி” என்று பெனிட்டா சொல்லிக்கொண்டிருக்கும்போதே மேடையை நோக்கி வருகிறது பெரும்கூட்டம்.
என்னுடனான உரையாடலுக்கு சிறிய இடைவேளை விட்டுவிட்டு மணமகனுடன் நின்று போஸ் கொடுக்கிறார் பெனிட்டா. புகைப்பட வைபவம் முடிந்ததும், “புத்தகத்தை நான் எழுதினாலும் இதைப் பிரசுரம் செய்து, பரிசாக வழங்கியது என் அப்பாதான்” என்று புன்னகையுடன் உரையாடலைத் தொடர்ந்தார்.

“எம்.ஏ., படிக்கும்போது கல்லூரி ஆய்வுக்குத்தான் முதலில் அதை எழுதினேன். அப்பா வாசிச்சிட்டு இதையே புத்தகமாக்கி திருமணப் பரிசா கொடுத்துட்டார். நகை, பணம்னு போட்டு கல்யாணம் செஞ்சு வைச்சாலும் என் எழுத்துக்களைப் படைப்பாக்கி புத்தகமாக என் அப்பா கொடுத்ததைத் தான் பிறந்த வீட்டில் இருந்து கிடைச்ச பெரிய சீராக நினைக்கிறேன். புத்தகத்துக்கு அணிந்துரை எழுதிய ஜேம்ஸ் ஆர் டேனியல் சார், ‘நான் கூட கடற்கரைச் சமூகம் குறித்து வெளியுலகுக்கு வரும் தகவல்களைத்தான் முழுமையா நம்பிட்டு இருந்தேன். ஆனால், அந்த நினைப்பின் போக்கையே தரவுகளோட இந்தப் புத்தகம் மாற்றி அமைச்சுடுச்சு’ன்னு சொன்னார். அதுமனதுக்கு ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. எழுத்தாளர் ஜோ டி குரூஸ், ‘தொடர்ந்து நிறைய புத்தகங்கள் எழுதும்மா’ன்னு ஊக்கப்படுத்தினார்.

மீனவச் சமூகத்தில் படிப்பைப் பாதியில் கைவிடுறவங்க அதிகம். அது ரொம்பக் கொடுமையான விஷயம். ஏழ்மை காரணமாகப் படிப்பைப் பாதியில் விட்ட கடலோர மாணவர்களைப் படிக்க வைக்கணும். கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் சிவில் சர்வீஸ், டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்குத் தயார் ஆகும் வகையில் இலவச கோச்சிங் சென்டர் வைக்கணும்னு நிறைய ஆசை இருக்கு...’’ என்று தனது லட்சியப் பட்டியலை பெனிட்டா சொல்ல... “இனி அது உன் ஆசை இல்லை. நம்ம ஆசை. நிச்சயம் செஞ்சு காட்டுவோம்” என்று அவருடன் சேர்ந்துகொள்கிறார் மணமகன் ரோட்ரிக் வில்ஸ்.

புரட்சிகரமான இந்த புதுமணத் தம்பதியின் லட்சியம் வெல்லட்டும்!

x