சிங்கப் பெண்ணே!


எஸ்.சுஜாதா
sujatha.s@hindutamil.co.in

குழந்தையை மடியில் போட்டுக்கொள்வதும், கொஞ்சுவதும், விளையாடுவதும், முகத்தோடு முகம் வைத்து உரசுவதும் சாதாரணமான விஷயங்கள்தாம். அந்தக் குழந்தை சிங்கமாக இருந்தால்..?

மனிதர் நமக்குத் தீங்கிழைக்க மாட்டார் என்கிற நம்பிக்கை சிங்கத்துக்கும், சிங்கம் நம்மைத் தாக்காது என்கிற நம்பிக்கை மனிதருக்கும் இருந்தால் மட்டுமே இவை எல்லாம் சாத்தியம். அந்த நம்பிக்கையை உருவாக்கிய ஜீவன்கள்தான், ஜாய் ஆடம்சனும் அவரது மகள் எலிசாவும்! இன்று உலகம் முழுவதும் வனவிலங்குகள் பாதுகாப்புக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்குக் காரணம் ஜாய் ஆடம்சன்.

‘இனி வேட்டையாட மாட்டேன்!’

ஆஸ்திரியாவில் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர் ஜாய். அந்தக் குடும்பத்துக்கு வேட்டையாடுவது பொழுதுபோக்கு. ஒருமுறை, உதவியாளருடன் சேர்ந்து மானைச் சுட்ட பிறகு, இனி வேட்டையாடுவதில்லை என்ற முடிவுக்கு வந்தார் ஜாய். யூதரான விக்டரைத் திருமணம் செய்துகொண்டார். நாஜிகளின் பிடியில் இருந்து தப்பிப்பதற்காக கென்யா சென்றார். கென்யாவின் காடுகளும் வனவிலங்குகளும் ஜாயின் மனத்தைக் கொள்ளைகொண்டன. விக்டருடனான உறவு விரைவில் முடிவுக்கு வந்தது.

தாவரங்களையும் மனிதர்களையும் ஓவியங்களாகத் தீட்டி ஆவணப்படுத்தும் முயற்சியில் இறங்கினார் ஜாய். இவர் தீட்டிய ஐநூறுக்கும் மேற்பட்ட ஓவியங்கள், கென்ய அருங்காட்சியகத்திலும் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திலும் இன்றும் ஆவணமாக பாதுகாக்கப்படுகின்றன. பிறகு, ஜாயின் கவனம் வனவிலங்குகள் மீது திரும்பியது. அப்போது ஜார்ஜ் ஆடம்சன் என்ற வனவிலங்குக் காப்பாளரின் அறிமுகம் கிடைத்தது. அவருடன் இணைந்து பணியாற்றினார். வனவிலங்குகள் பற்றிய தகவல்களைச் சேகரித்தார். புகைப்படங்களை எடுத்தார். அந்தப் பயணத்துக்கு நடுவே ஜார்ஜும் ஜாயும் சேர்ந்து வாழ ஆரம்பித்தனர்.

தாய் சிங்கத்துக்கு தாயானவர்!

ஜார்ஜ் ஒருமுறை வன உலா சென்றபோது, சிங்கம் ஒன்று அவரை நோக்கிப் பாய்ந்தது. தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அந்தச் சிங்கத்தைச் சுட்டுவிட்டார். பிறகுதான் தெரிந்தது, அது ஒரு தாய் சிங்கம், தன் மூன்று குட்டிகளைக் காப்பாற்றுவதற்காகவே ஜார்ஜ் மீது பாய்ந்து இருக்கிறது. இதையறிந்த ஜாய் தாயை இழந்த மூன்று சிங்கக் குட்டிகளையும் வீட்டுக்குக் கொண்டுவந்தார். ஜாயும் ஜார்ஜும் அவற்றை மிகுந்த அக்கறையோடு கவனித்துக்கொண்டார்கள். சில மாதங்களில் மூன்று குட்டிகளையும் கவனித்துக்கொள்வது கடினமாக இருந்தது. அதனால் வலிமையான இரண்டு குட்டிகளை உயிரியல் பூங்காவுக்கு அனுப்பிவிட்டனர். சற்று நோஞ்சானான ‘எல்சா’ குட்டியை வீட்டிலேயே வைத்து வளர்த்தார்கள்.

மடியில் உறங்கும் சிங்கக்குட்டி

சிங்கக்குட்டியை வீட்டில் வைத்து வளர்த்த போதுதான், மனிதர்களுக்கும் சிங்கத்துக்குமான நம்பிக்கையும் அன்பும் உருவானது. எல்சா தங்களிடம் வளர்ந்தாலும் ஒருகட்டத்தில் அதைக் காட்டில்தான் விடவேண்டும் என்று ஜாய் முடிவெடுத்ததால், வேட்டையையும் காட்டு வாழ்க்கையையும் அந்தச் சிங்கக்குட்டிக்குக் கற்றுக்கொடுத்தார். முழுமையாக வளர்ந்த எல்சா, ஜாய் மடியில் படுத்து உறங்கும். இருவரும் தோளோடு தோள் உரசிக்கொண்டு வேடிக்கை பார்ப்பார்கள். முகத்தோடு முகம் வைத்து கொஞ்சிக்கொள்வார்கள். விளையாடுவார்கள். தன் மீது ஏறி விளையாடும்போது, எல்சா தன்னுடைய நகங்களால் காயம் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்வதை அறிந்து வியந்தார் ஜாய்.

ஒருகட்டத்தில், எல்சாவை காட்டில் விட்டு ஜாய் கண்காணித்தார். எல்சா, காட்டு வாழ்க்கையை ஏற்றுக்கொண்டது. வேட்டையாடி உண்டது. அப்போதும் ஜாயைப் பார்த்தால் அதே அன்புடன் பழகியது. தன் தாயைப் போலவே எல்சாவும் மூன்று குட்டிகளை ஈன்றுவிட்டு, விஷக்கடியால் நோய்வாய்ப்பட்டு இறந்து போனது. ஜாயும் ஜார்ஜும் துயரத்தில் ஆழ்ந்தார்கள். எல்சாவைப் புதைத்துவிட்டு, தங்களையும் எல்சாவுக்குப் பக்கத்திலேயே புதைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள்.

ஆஸ்கர் வென்ற சிங்கக்கதை

எல்சாவைப் பற்றி, ‘பார்ன் ஃப்ரீ’ என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார் ஜாய். மிகப் பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தப் புத்தகம், விற்பனையில் சாதனை படைத்ததோடு, வனவிலங்குகளைப் பற்றிய புரிதலையும் ஏற்படுத்தியது. இந்தப் புத்தகம் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு, ஆஸ்கர் விருதையும் வென்றது. எல்சாவையும் அதன் குட்டிகளையும் வைத்து மேலும் இரு புத்தகங்களை எழுதி வெளியிட்டார் ஜாய்.

வனவிலங்குகள் பாதுகாப்புக்காக ஓர் அமைப்பையும் ஏற்படுத்தினார் ஜாய். அதன் மூலம், விலங்குகளைக் காப்பாற்றுவதற்கு நிதி திரட்டினார். வனவிலங்குகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஜாயும் ஜார்ஜும் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். வனவிலங்குகளைக் காக்கும் நடவடிக்கைகளில் இறங்கிய ஜாயும் ஜார்ஜும் ஒருகட்டத்தில் வேட்டைக்காரர்களின் வெறுப்பை சம்பாதிக்க ஆரம்பித்தார்கள்.

வேட்டையாடப்பட்ட அன்பு மனிதர்கள்

இதனிடையே, அடுத்ததாக சிறுத்தையைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினார் ஜாய். சிங்கத்தைப் போலவே சிறுத்தையும் அவரிடம் நெருங்கிப் பழகியது. அன்பு பாராட்டியது. சிறுத்தையுடன் நடைபயிற்சி மேற்கொண்டார். விளையாடினார். சிறுத்தைகளைப் பற்றிப் புத்தகங்களும் எழுதினார்.

ஆஸ்திரியாவில் பிறந்து, வாழ்க்கையின் பெரும்பகுதியை ஆப்பிரிக்காவில் செலவிட்ட ஜாய், 70 வயதை அடைய இருந்தார். 1980, ஜனவரி 3-ல் ஜாயின் உயிரற்ற உடல் கண்டெடுக்கப்பட்டது. சிங்கம், சிறுத்தை போன்ற விலங்குகள் தாக்கி, ஜாய் இறந்ததாகச் சொல்லப்பட்டது. பிரேதப் பரிசோதனையில் விலங்குகள் தாக்கிக் கொல்லப்பட்டதற்கான அடையாளம் ஏதுமில்லை என்று தெரியவந்தது. கடுமையான ஆயுதத்தால்தான் ஜாய் கொல்லப்பட்டிருந்தார். 9 ஆண்டுகளுக்குப் பிறகு, வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்ட ஜார்ஜின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. ஜாய், ஜார்ஜ் இருவரின் உடல்களும் அவர்களின் விருப்பப்படியே அன்பு மகள் எல்சாவுக்கு அருகில் புதைக்கப்பட்டன.

40 ஆண்டுகளுக்கு மேலாக வனவிலங்குகளின் நலனுக்காகப் பாடுபட்ட ஜாயின் நடவடிக்கைகள் தாம், 40 ஆண்டுகளுக்குப் பிறகும் வனவிலங்குகள் பாதுகாப்பில் உத்வேகம் அளித்துக் கொண்டிருக்கின்றன!

x