நிழற்சாலை


சட்டகத்துக்குள் மிதக்கும் விண்மீன்கள்!

மொட்டைமாடி இரவில்
வானக்கடலில்
விண்மீன்கள் நீந்துகின்றன.
சின்ன மீன் பெரிய மீன்
வண்ணமீனென
ஒளியுமிழ்ந்துகொண்டு
ஒளிந்து விளையாடுகின்றன.
கண் நழுவிப் போகுமவற்றை
கைகளில் ஏந்திட எண்ணி
கவிதை வலை விரித்தேன்
அத்தனையும் காகிதத்தில்
அழகாய் வந்தமர்ந்தன
தனித்துவிடப்பட்ட நிலவு
பொறாமையோடு கடந்துபோகிறது
என் கவிதை மீன்களை!
- காசாவயல் கண்ணன்

பெருந்தொற்றின் ஆறாச் சுவடுகள்!

பன்னீர் தெளித்த வெள்ளிக் குப்பிகளில்
கிருமிநாசினிகள் நிரப்பப்பட்டன.
சமூகத்தில் நெருக்கமின்றி
இடைவெளிகளை ஏற்படுத்திக்கொண்டோம்.
காதுகளில் மாட்டி முகத்துக்குக் கீழே
கழுத்தில் தொங்கியபடியே
விடுதலையறியாது உறவுகொண்டு
இன்று நம்மோடு முகக்கவசங்கள்
உடலோடு ஒட்டிப் பிறந்த
கவச குண்டலங்களைத் தானமாகக் கொடுத்த
கர்ண பரம்பரைக் கதைகளைக்
கேட்டுக் கேட்டு செயலிழந்தன
அனைவரது செவிகளும்.
எப்போது துறப்போம் முகக்கவசங்களை?
உருமாறும் கரோனாக்களின் தாக்குதல்கள்
வேற்றுக் கிரகவாசிகளின்
படையெடுப்பாய் நினைவில் நிற்கின்றன!
- கா.ந.கல்யாணசுந்தரம்

x