ரிஷபன்
rsrinivasanrishaban@gmail.com
“ரிஷப ராசி நேயர்களே... இந்த வாரம் உங்களுக்கு பொன்னான வாரம். எதிர்பாராத நற்செய்தி உங்களைத் தேடி வரும்." - குங்குமப் பொட்டுக்காரர் சிரிச்சுகிட்டே டிவியில ராசிபலன் சொன்னப்போ நான் நம்பல. ஆனா அவர் அடுத்த ராசிக்காரரைத் தேடிப் போறதுக்குள்ள என் வீட்டு காலிங் பெல் அடிச்சுது.
கதவைத் தொறந்தா ‘வீரவாள்’ நின்னுகிட்டிருந்தார். என்னையும் தள்ளிகிட்டு உள்ள வந்தவரு, “கையக் கொடுய்யா. நீ எங்கியோ போகப் போற”ன்னாரு. வீரவாளோட நிஜப்பேரு சங்கர். நாடக ஆர்வலர். டவுன்ல ஒரு சபால இது வரை நாலு நாடகம் போட்டுருக்கார். அவரோட முதல் ட்ராமா ‘வீரவாள்’. ஒரு கத்திய வச்சே கதை சுத்தும். கடைசி சீன்ல கத்திய உறையிலேர்ந்து உருவுனா பிடி மட்டும் வந்துச்சு. அவசரமா ஸ்கிரீனைப் போட்டு கத்தியை செட் பண்ணி... அதுக்கும் ஒரு வசனம் பேசி சமாளிச்சுட்டாரு. அன்னிலேர்ந்து அவர் பேரே ‘வீரவாள்’னு ஆயிருச்சு.
வீட்டம்மிணி இவரோடா ஹாஹா சத்தம் கேட்டு பயந்துகிட்டே எட்டிப் பார்த்தாங்க. அவங்க அப்படி பயந்ததுல எனக்கு ஒரு சந்தோஷம். “உங்க வீட்டுக்காரருக்கு நல்ல காலம் பொறந்துருச்சு. குடத்துல இட்ட வெளக்கா இருக்கவர மலைக் கோட்டைல ஏத்தி வைக்கப் போறேன்” னு வசனம் பேசினாரு.