நிழற்சாலை


கதை சொல்கிறான் மகன்

யதார்த்தங்களை
ஆச்சரியமாக்கிச் சொல்லும்
அவன் பாவனைகளுக்கு
பணிந்து கிடக்கிறதென் மனம்
அவனது ஒவ்வொரு வார்த்தையையும்
குழந்தையாய் நான்
ஆமோதித்ததில்
பெரியவனாக எண்ணியிருக்கக்கூடும் 
தன்னை.
கைகளை உயர்த்தி
கதையளக்கும் அந்நொடி
தகப்பனாகத்தான்
தெரிந்தான் மகன்.
- கனகாபாலன்

இருளின் வெளிச்சத்தில்...

திடீரென மின்சாரம்
தொலைகையில்
வெளிச்ச எச்சங்களை
கவ்விப் பிடிக்கிறது இருள்.
இருளின் பள்ளங்களில்
தட்டுத்தடுமாறுகின்றன
நகரத்து வீதிகள்.
கடந்துபோகும் வாகனங்களின்
வெளிச்சத்தில்
முகம் பார்த்துக்கொள்கின்றன
சாலைகள்.
எல்லாவற்றையும்
வெட்டவெளிச்சமாக்கும்
பகலைவிடவும்
ரகசியங்கள் காக்கும் இருளை
பிடித்தேயிருக்கிறது
கடைத்தெருவுக்கு
மெழுகுவத்தி
வாங்க வந்தவனுக்குத்
துணையாகவே வீடுவரைக்கும்
வந்துபோகிறது இருள்.
- காசாவயல் கண்ணன்

x