நிழற்சாலை


வட்டம் தாண்டு

அன்பை அன்பாக மட்டுமே
வைத்திருப்பதில் என்ன இருக்கிறது
வட்டம் தாண்டி பாருங்களேன்
மலை உச்சி ரசிக்க மட்டுமா
எட்டிக் குதித்து அருவியாகவும்தான்
கனவென்றாலும் கண்டுவிடுங்கள்
இரவு பகல் மறந்து
பைத்தியம் சூடி ஓடி ஒளிய
பேரன்பு பிறக்கும்
சுயம் தாண்டி பழகுங்கள்
சொப்பனம் தாண்டட்டும் முத்தம்
அற்புதம் அவசியம் எல்லாம்
இல்லை அன்புக்கு
தலை சுற்றி தவம் கலைகையில்
சிரிக்கலாம் குழந்தையென
கொள்கை பற்கள் உடைய
கொய்த சொற்கள் மறக்கும்
நயம்பட கத்தி அழுகையில்
சுற்றிலும்தான் அழியும்
பசிக்குக் கையேந்துங்கள்
எல்லாமே சமமென
எல்லாமே அன்பென அறிய.
- கவிஜி

வெயில் கோடுகள்

இடது கையில் இளநீரைப் பிடித்து
வலது கையின் அருவா வீச்சில்
இளநீரின் கிரீடத்தை
கொஞ்சம் கொஞ்சமாய் சீவினால்
இளநீரின் தலையில்
நிலவையொத்த வட்டத் துளைக்குள்
சில்லென்று ஒரு நிறை குளமிருக்கிறது.
கோடை தணிக்கும்
அக்குட்டிக் குளத்தைக்
குடித்துத் தீர்த்தால் தீர்த்தமென
உணவுக் குழாய் வழியே
உள்ளுறுப்புகளைக் குளிர்வித்து
பாய்கிற இளநீர்
ஒரு பேரானந்த நதி.
இனிப்பாய் மாறிய உடலோடு
சூடு குறைத்து
ஓட்டம் தொடர்கையில்
விடாது கருப்பென
உள்ளூர பாய்ந்த நதியை
வெயில் சாட்டையைச் சுழற்றி
பின்தொடர்கிறது வெப்பச் சூரியன்.
- மு.மகுடீசுவரன்

x