தஞ்சாவூர்
டீக்கடை ஒன்றில்...
``ஏகப்பட்ட போட்டிக்கிடையிலே, தென்னந்தோப்புக்காரரு பூந்து ராஜ்யசபா சீட்டை தட்டிட்டுப் போயிட்டாரே!''
``சும்மாவா? டெல்லி சென்னை ன்னு பல பேரை சந்திச்சு, தோப்புக்கரணம் போட ரெடின்னு தோப்புக்காரரு புரிய வெச்சாருல்ல...''
``நீ ஒண்ணு... கதரை காவியாக்கிடறேன்னு சொல்லி சீட்டை தட்டிட்டாரு போல... பலே... பலே... மூப்பனாரு புள்ள இப்படி பதவிக்காக மூக்கணாங்கயிறை மாட்டிக்கிட்டாரே! என்னத்தைச் சொல்ல...''
- தஞ்சாவூர், தே.ராஜாசிங்ஜெயக்குமார்
ஆத்தூர்
கோழிக்கடையில் இருவர்...
``எப்ப பாரு! யாரைப் பார்த்தாலும் கரோனா,கரோனா ன்னு பேசுறானுங்க. போதாக்குறைக்கு கேரளாவுல பறவைக் காய்ச்சல்னு மறுபடி பேப்பர்ல கொளுத்திப் போடுறான். எல்லாருமா சேர்ந்து என் பிழைப்பை உண்டு இல்லைன்னு ஆக்கிட்டாங்க! ஞாயிற்றுக் கிழமைன்னா கோழி வாங்க கூட்டம் அலை மோதும், இன்னைக்கு ஆளே இல்லாம ஈயாடுது!’’
``அதான் பிரதமர்ல இருந்து முதல்வர் வரை கரோனா பற்றிய வதந்திகளை நம்பாதீங்க! யாரும் அதைப்பற்றி அச்சப்பட வேண்டாம் ன்னு சொல்லிட்டுத்தானே இருக்காங்க!’’
``ஆமாய்யா... யாருக்கு போன் போட்டாலும் எதிர் சைடுல இருமுற மாதிரி பதிவு பண்ணி வச்சு இதே கவர்மென்ட்தானே பீதியை ஊதி விட்டுக்கிட்டு இருக்கு...”
- சூழவாய்க்கால், எ.முகமது