பட்டையைக் கிளப்பும் பாட்டையா


கணேசகுமாரன்
ganeshkumar.k@kamadenu.in

பாரதி திரைப்படத்தில் பாரதியாரின் தகப்பனாராய் நடித்ததிலிருந்து சமீபத்திய சைக்கோ திரைப்படம் வரை தன் கலை இருப்பை எவ்வித நெருடலுமின்றி நிறுவிவரும் மணி என்கிற பிச்சுமணி என்கிற பாரதி மணி என்கிற பாட்டையா என்கிற... எனப் பல என்கிற போட்டுக்கொள்ளும் தகுதி படைத்த சகலகலாவல்லவர் என்று அறிமுகப்படுத்தலாம் பாரதி மணியை. எழுத்தாளர் க. நா. சு வின் மருமகன் என்ற தகுதியை தன் சந்தோசத்தில் ஒரு பாதியாய் பதித்துக்கொண்டு பாரதி மணி எழுதியிருக்கும் இக்கட்டுரைகள் வாசிப்பில் தீராதது. அவரின் வாழ்வின் அனுபவங்களின் கட்டுரைத் தொகுப்பு என்று எளிதாகக் கடந்து சென்றுவிட முடியாதபடி அவரின் எழுத்தாளுமை மயக்குகிறது.

தான் எவ்வளவு பெரிய மேதாவி தெரியுமா என்ற தொனி எங்கும் தென்படாமல் (அதற்குத் தகுதி இருந்தும்) சக வாசகரின் தோளில் கை போட்டுப் பேசும் சிநேகித பாணி எழுத்துக்கு கம்பீர கை குலுக்கல்கள். தன் உயர் சாதி மனப்பான்மையைப் பகடிக்கு உட்படுத்திக்கொள்ளும் நகைச்சுவை உணர்வு, தன் குள்ளமான உருவத்தையும் வாழ்வின் சிரிப்பில் இணைக்கும் அழகு, தன் குடிப்பழக்கத்தை நாகரிகத்தின் உச்சத்தில் கையாண்ட விதம் என்று எல்லாவிதத்திலும் சிக்சர் அடிக்கிறார். மொக்கை கட்டுரை என்று அவரே தலைப்பிட்டுச் சொன்னாலும் அந்தக் கட்டுரையில்தான் வாசகன் குறிப்பெடுத்துக்கொள்ளும் எக்கச்சக்க வரிகள் தென்படுகின்றன. பக்கத்துக்குப் பக்கம் பத்திக்கு பத்தி தெறிக்கும் நகைச்சுவை உணர்வே பாட்டையாவை நம் நண்பனாய் மனதுக்கு நெருக்கமாய் உணரச் செய்கிறது. ஆபரேஷன் தியேட்டரில் படுத்துக்கொண்டு நரேந்திர மோடியை வம்புக்கிழுத்ததெல்லாம் அல்டிமேட் ரகளை.

சரசரவென்று எழுதிச் செல்லும் எழுத்தில் வரும் தகவல் பிழையைக் கூட தனக்கு சாதகமாக்கிக் கொண்டு அதை சிரிப்புக்குத் திருப்பும் பாரதி மணியின் எழுத்து நடைக்கு ஒரு உதாரணம்... சிவாஜி கணேசன் கட்டுரையில் அதோ அந்தப் பறவை போல பாட்டை குறிப்பிட்டுவிட்டு ‘இது எம்ஜி ஆர் படம்ல... அதுக்கென்ன இருந்துட்டுப் போகட்டுமே’ என்று கடக்கும் குசும்புத்தனம்... தி. ஜானகிராமன் அடிக்கடி சொல்லும் வாக்கியமாக பாரதி மணி குறிப்பிடும் வரிகளை எழுத்தாளர்கள் அனைவரும் தங்கள் நாட்காட்டியில் குறித்துக்கொள்ள வேண்டிய ஒன்று. ‘81 வயசெல்லாம் ஒரு வயசா... இன்னும் நிறைய சாதிக்கலாம்’ எனச் சொல்லும் பாட்டையாவுக்கு முன்னால் இளமை கைகட்டி சேவகம் செய்கிறது.

x