நிழற்சாலை


அகிம்சை ஆயுதம்

காட்டில் மற்ற மரங்களை
தனதடிமையாக வரித்துக்கொள்கிறது
அந்தக் கருவேல மரம்
தன் நிழற்சாலையில்
பலரும் இளைப்பாறுவதாக எண்ணி
முட்களைப் பதித்து கிரீடம் சூடிக்கொள்கிறது.
அது குத்திக் கிழிக்கும் என்று
எவருமே நெருங்காதபோதும்
வழிநெடுகிலும் முட்களைத் தூவி
பிசுபிசுக்கும் குருதியில்
தன் இருப்பை உரக்கச் சொல்கிறது.
அதீத பசி கொண்ட இரண்டு கறுப்பாடுகள் மட்டும்
அதன் காயை ருசிக்க
வேர்களில் காத்துக்கிடக்கின்றன 
எச்சரிக்கையாகவே
நிலத்தின் நீரனைத்தையும்
உறிஞ்சிவிட்ட அம்மரத்தின் பாதையில்
முட்களைக் கிடத்தி மீதேறி
நடக்க ஒருவன் வந்தான்
நாணலைப் போல் வளைந்து
மாற்றுப் பாதையில் செல்லாமல்
அவன் வள்ளுவன் போல்
இன்னா செய்தாரை ஒறுக்கவில்லை
மகாத்மாவாகவும் ஆகவில்லை
மன்னித்து
கிரீடத்தைக் கழற்ற
அதன் சகாப்தத்தில்
தன் முதல் எதிர்ப்பை
பூரணமாய் பதிவுசெய்து 
வெளியேறிவிட்டான்
இனி அதை நோக்கி
கற்களை வீசுவது சுலபமாக இருக்கும்
அது அறிந்த ஒரு மரணத்தை
அதன் காலடியில் வைக்கவும்.
- ஸ்ரீகா

ஏழ்மையின் ஈரம்

ஈரப் புடவையின்
ஒரு முனையை
அந்தக் கொடிமரத்திலும்
மறுமுனையை உடலிலும்
சுற்றிக்கொண்டு
உலர்த்திக்கொண்டிருந்தாள்
ஓர் ஏழைத் தாய்
பறந்துகொண்டிருந்த
கொடிகளுக்கு நடுவே
தனது வறுமையை!
- இ.சூர்யா

x