நிழற்சாலை


உள்பதுங்கலில் இல்லாத வாழ்வு

கோயில் வாசலில்
சிதறிய தேங்காயொன்று
யாசகம் கேட்கும் பித்தனின்
கைகளில் கிடைத்ததும்
பசி மறக்கத்
தின்னத் தொடங்கினான்.
சிறுதுண்டை 
அகமகிழ்வோடு அருகில் நின்று
வாலை ஆட்டும் நாய்க்கும் வீசினான்.
தின்னும் பொழுதில்
நாயிடமிருந்து விழுந்த
சிறு தேங்காய்த் துணுக்குகளுக்காக
வந்து குவிந்தது எறும்புக் கூட்டம்.
எறும்பொன்று விட்ட சிறு துகளும்
நாளை இன்னும் சிறியதாய் மக்கி
உணவாகக் கூடும்
நுண்ணுயிரி சிலவற்றுக்கு.
பகிரப்பட்டுக்கொண்டே பயணிப்பது
ஏதோ ஒன்றுக்கு வாழ்வாகிறது
வாழும் வாழ்வுக்கும்
சுவையைக் கூட்டியபடி.
- அன்றிலன்

பறவைகளின் செய்தி

பறவைகளைக் கொல்லும் வரம்
யாருக்கும் கொடுக்கப்படவில்லை
பறவைகளின் தூரங்களை
யாரும் அளந்ததில்லை
பறவைகள் உணவை
யாரும் தெரிந்துகொள்வதில்லை
அவற்றின் குரலையும்
ஆராய்ச்சி செய்ததில்லை
காணாமல்போன பறவை பற்றி
யாரும் கவலைகொள்வதில்லை
எங்கிருந்தோ வரும்
ஆஸ்திரேலியா பறவைக்கு
வேடந்தாங்கல் இருக்கிறது
நம் வீட்டில் தண்ணீர் வைத்ததில்லை
மோதி உயிரிழக்கும் பறவைகளை
கண்டுகொள்வதில்லை
எங்கேயோ செய்தி பார்த்து
கண்ணீர் சொட்டுவோம்
இருந்தபோது
பறவைகளைப் பற்றி
கவலைகொள்ளாத நாமா
அவை இல்லாதபோது
கவலை விரிக்கப்போகிறோம்?
- வீரசோழன்.க.சோ.திருமாவளவன்

x