பதற்றக் கவிதைகளின் வழியே பயணம்


கணேசகுமாரன்
ganeshkumar.k@kamadenu.in

உடல் கொண்டு வந்த மனங்கள் எதுவுமில்லை என்று இத்தொகுப்பின் கடைசிக் கவிதையின் கடைசி வரி கூறினாலும் தொகுப்பு முழுவதும் மனதின் கால்கள் போகும் பதற்றப் பாதையாகவே விரிகின்றன. என்னுரையில் சொன்னதுபோல் உவமைகளிலிருந்து விலக நினைக்கும் கவிஞர் படிமங்கள் வாயிலாக பல கவிதை தரிசனங்களைத் தந்து போகிறார். 104 பக்கங்களில் 200 க்கும் மேற்பட்ட கவிதைகளைத் தந்திருக்கும் போகன் சங்கரின் நிஜமான கனமான தொகுப்பு இதுதான். பசியின் பொருட்டு நாம் அடையும் எத்தனையோ மன அவசங்களை மெல்லிய கோடென காட்டிச் செல்கிறது எவற்றையெல்லாமோ நினைவில் வைத்திருந்தார் அவர் என்று தொடங்கும் கவிதை. பசி வந்தால் பத்தும் மறந்துகூட போகும்தானே... அப்படி மறந்த ஒருவனின் ஞாபகத்தை வலியுடன் தூசி தட்டுகிறது கவிதை.

தனிமை மிக பாரமானது. அதிலும் ஒரு மரணத்துக்குப் பின்பான தனிமையின் இருளின் மேல் யானை நடக்கும் கவிதை 5 வரிகளானாலும் மிகப் பெரும் பாரம் தந்து போகிறது. வாழ்வில் நாம் அன்றாடம் காணும் சம்பவங்களில் அபூர்வங்களும் உண்டு. கிட்டத்தட்ட அவை அனைத்தும் இங்கு பதிவாகியிருக்கின்றன எனலாம். சாமியின் அழுக்கு முகத்தை துடைக்கும் பெண் ஓர் உதாரணம். மன நலம் பாதிக்கப்பட்ட பெண்ணைப் பற்றிய விவரணையில் வரும் அந்தக் கடைசி வரி நிஜமான திடுக்கிடலை வாசகனுக்கும் வழங்குகிறது. தழலை நோக்கி எவ்வும் பறவை மரணத்தைத் தவிர்க்கவே அப்படிச் செய்கிறது என்ற வரி தரும் வாசக அதிர்வு பல யோசனைகளுக்கு அழைத்துச் செல்கிறது. சாவதிலும் ஒரு சுகம் உண்டு என்ற மூத்த கவியின் சொல்லுக்கு எதிர் தரப்பில் இயங்கும் இவ்வரிகளுக்கும் சாகா வரம் உண்டு.

நிறைவேறாத காதலின் ஒளி வினாவின் வழி செவியில் வீழும்போது எவ்வளவு பதறிப்போகிறோம். இந்தப் புகைப்பட ஆல்பத்துக்குள் வராமல் இத்தனை நாளும் நீ என்ன செய்துகொண்டிருந்தாய் என ஒரு காதல் வினா எழுப்பும்போது பதற்றமுறுவதைத் தவிர வேறென்ன செய்துவிட முடியும்? யாரோ முதன்முதலாய் பார்க்கும் விண்மீனாய் நாம் இருந்திருப்போம். அல்லது நாம் முதலாய் பார்க்கும் விண்மீனாய் யாரோ இருந்திருப்பார்கள். இவை இரண்டுமே வாழ்வில் பதற்றம் தருபவைதான். ஒரு கவிதையில் இதைக் கூறிச்செல்லும் போகன் சங்கர் தப்பித்துப் போகச் சொல்லி வழி காட்டுகிறார். ஆனால் பாதைகளும் இல்லாத வழி மறிப்பும் இல்லாத அனாதர வெளியது.

x