நிழற்சாலை


தாய்மை கீர்த்தனைகள்

காற்று கடத்தி வரும்
அந்த ஆரிராரோ
நேற்று போல் உள்ளது.
சன்னக் குரலில்
ஜன்னல் வழி நுழையும்
சின்னதொரு ஈர்க்கும்
மெல்லிசைதான் அது.
இமைகளைப் பிரிக்காமல்
இதயத்தைத் திறந்து
வாங்கி வாங்கிக் குவித்தாலும்
ஆவலது அடங்குவதில்லை.
சுமைகளெல்லாம்
சுறுசுறுவென்று கரைய
அடிவயிற்றுத் தழும்பு
தடவிப் பார்த்துக்கொள்கிறேன்.
இன்னும் அப்படியே இருக்கின்றன
உன்னைச் சுமந்த உணர்வும்
என்னில் நிறைந்த தாய்மையும்.
- கனகா பாலன்

அழகடையும் வடிவம்

அறை வாங்கி நிலைகுலைந்தபோதும்
உறைந்த புன்னகையை
மாற்றாமலிருக்கும்
கரடி பொம்மையின்
கன்னம் பிடறிகளைத் தடவி
‘ச்சாரி…வலிச்சுச்சாம்ம்ம்மா’
ஆசுவாசப்படுத்தும்
ராணி பாப்பாவின்
எச்சில் தெரிக்கும்
வார்த்தை ஸ்பரிசத்தால்
இளகி உருகி
மேலும் அழகடைகிறது
சிரிப்பின் உறை வடிவம்!
- ஸ்ரீநிவாஸ் பிரபு

x