கணேசகுமாரன்
ganeshkumar.k@kamadenu.in
தொகுப்பின் எந்தக் கவிதைக்கும் தலைப்பு வைத்து தொந்தரவு செய்யாமல் சொல்ல வந்ததை தனக்குரிய மொழியில் சொல்லிச் சென்றிருக்கும் கீதாபிரகாஷுக்கு வாழ்த்துகள். வெறுமனே அழகியல் என்று முடித்துவிடாமல் இன்றைய சமூகத்தின் சாட்சியாக இயங்கியிருக்கிறார் கவிஞர். ஒரு பாலியல் வன்புணர்வுக்கும் கொலைக்கும் சாட்சியாக இருக்கும் ஒற்றைக் குயில், நவ யுகத்தின் சாபமாக நெகிழிப்பையில் அடைக்கலமாகும் ஜோடி மீன்கள், ஆணவக் கொலைக்கு பயன்படுத்திய கவிதை, கதை உத்தி என்று பல கவிதைகளிலும் கவனிக்க வைக்கிறார்.
அங்கங்கே தென்படும் முத்தக் கவிதைகள், சமூக அவலத்தின் மீதான கோபக் கவிதைகளின் நடுவில் சாரலாய் பன்னீர் தெளிக்கின்றன. அட என்று சபாஷ் போடவைக்கும் ஆண்குரல் சித்ராவும், அம்மன் வேடமிட்டு ஆடும் ஆயிஷாவும் வாழ்வின் நிதர்சனத்தில் அழகியல் கூட்டுகிறார்கள். வலி மிகுந்திருந்தாலும் கவிதையில் நின்று விளையாடுகிறது ‘நீ வரைந்திருக்கும் ஒற்றைக் கோடு’ கவிதை. ஓவியத்தை உற்றுப் பார்ப்பதோடு கவிதை முடிந்துபோக அதன் பின்னான விளக்கம் தேவையற்று தொக்கி நிற்கிறது. மனப்பிறழ்வு மனிதர்கள் குறித்த கவிதைகள் சில தென்படுகின்றன. கம்பீரம் பேசுவதாகவும் பரிதாபத்துக்குரிய யதார்த்தம் பேசுவதாகவும் விரிகின்றன அவை.
வயதுக்கு வரும் முதிர்வைப் பற்றிக் கூறும் கவிதையின் முடிவு பயம் கொள்ள வைக்கிறது. பென்ணின் இன்னொரு பக்கம் பேசும் அக்கவிதை பால்ய கால ஞாபகங்களைக் கிளறிச் செல்வதையும் தவிர்க்க முடியாது. கிராமத்து வாழ்விலிருந்து விடுபட்டு நகரத்து நெருக்கடிக்கு வாழ்க்கைப்படும் எளிய மனதின் வருத்தம்தான் ‘பலாப்பழம்’ கவிதையில் தென்படுகிறது. பிறந்த மண் விட்டுப் பிழைக்க இன்னொரு இடம் வரும் பலருக்கும் பொருந்தும் சுவை இந்தப் பலாவில்.