நீயெல்லாம் ஒரு அண்ணனா..


ரிஷபன்
rsrinivasanrishaban@gmail.com

மளிகைக் கடைல நின்னு  "புளி அரைக்கிலோ..."ன்னு கேட்டப்ப தான் என்னோட போன் அலறுச்சு. எடுத்தா வயித்துல புளியைக் கரைக்கிறாப்ல ஒரு அழுகை. தங்கச்சி தான் அழுதுகிட்டே பேசுனா. எனக்கு எதுவும் புரியல. “யம்மாடி... ஒண்ணு அழு... இல்லே சொல்லிட்டு அழு”ன்னேன்.

“இப்பயே இங்க வா. என்னால இனி ஒரு நிமிஷம் கூட இவரோட இருக்க முடியாது” ன்னு குண்டத் தூக்கிப் போட்டாப்ல சொன்னா. எப்போ புத்தி குழம்புதோ அப்ப நமக்கு அதாவது... கல்யாணமான ஆம்பளைங்களுக்கு இருக்கிற ஒரே ஒரு ஆலோசகர் அவங்க வீட்டம்மிணி தான். இன்னும் நல்லாக் குழப்பி விடுவாங்க. அதுலயே மிரண்டு நாமே ஒரு முடிவை எடுத்துருவோம்.
 “புளி அரைக்கிலோ... அப்புறம்... வேற என்ன சார்?”னு அண்ணாச்சி அன்பா கேட்டாரு. போதும்னு கையாட்டிட்டு அம்மிணிக்கு போன் அடிச்சேன்.  “என்ன... தங்கச்சி போன் பண்ணிட்டாளா?”ன்னு படக்குன்னு கேட்டாங்க. ஒரு யட்சிணியையா நம்ம கல்யாணம் கட்டியிருக்கோம்னு மிரண்டு போய்,  “ஆமா...”ன்னு சொன்னேன்.

 “இங்க போன் அடிச்சா. நீங்க இல்லேன்னதும் கட் பண்ணிட்டா மவராசி. உடனே உங்க செல்லுக்குத்தான் அடிப்பான்னு தெரியும்”னு ராணுவ ரகசியத்த போட்டு உடைச்சாங்க.  “இப்ப நான் என்ன செய்யட்டும்?”னு கேட்டதும், “புளியக் கொண்டாந்து குடுத்துட்டு தாராளமா போயிட்டு வாங்க”ன்னு தீர்ப்பு சொல்லிட்டாங்க.

x