நிழற்சாலை


பின்தொடரும் நிழலின் மனம்

பின்தொடர்கிறது
கருநிழலொன்று.
அடிகள் ஒவ்வொன்றையும்
பூனை மாதிரி
பார்த்துப் பார்த்துதான் வைக்கிறது.
அதன் புத்திசாலித்தனத்தை
மெச்சத்தான் வேண்டும்
கருநிழலெனினும்
வெண் பல்லுண்டு
விஷச் சிரிப்பும்கூட.
என் வியர்வையில்
விளைந்த வெற்றிகளை
ஜீரணிக்க சிரமப்பட்டாலும்
வெற்றியென்பதை
வேண்டாவெறுப்பாய்
ஒப்புக்கொள்ளும் நாடகம் ஏனோ
ஒத்துவரவில்லை அதற்கு.
நீலச் சாயம் வெளுத்த
அதைப் பார்க்க
சங்கடமாகத்தானிருக்கிறது.
என்னவொரு தோழமை…
குகனாவது வீடணனாவது
யாரும் நிகராக முடியாது அதற்கு.
கருநிழலோடு கலந்து கலந்து
ஒருவழியாய்
எல்லாம் பழகிப்போயிற்று.
என்றாலும் எப்போதும்
கருநிழலோடு
தோற்றுக்கொண்டிருப்பது போல்
முகத்தை வைத்துக்கொள்ளும்
அவஸ்தைக்கு
எப்படித்தான் பழகிக்கொண்டேனோ
ஆச்சரியமாகத்தான் இருக்கிறது!
- சீ.குறிஞ்சிச்செல்வன்

இறுதி இடைவெளி

இறங்க வேண்டிய இடம்
நெருங்குவதை 
அறிவிக்கும் இன்குரல்
கலக்கமளிக்கிறது.
'வலதுபுறமுள்ள
கதவுகள் திறக்கும்' எனும்போது
உன் இடப்புறத்திலிருந்து எழுகிறேன்.
‘இடைவெளியை
கவனத்தில் கொள்ளவும்’
என்று மட்டும் இருந்திருக்கலாம்
அந்த இறுதி அறிவிப்பு.
அன்புகூர்ந்து இடைவெளியை
கவனத்தில் கொள்ளும்போது
வெடிக்கும் தன்னிரக்கத்தில்
சிதறுவதைப் பார்க்கும் முன்பு
மூடிக்கொள்கின்றன
அன்பறியா தானியங்கிக் கதவுகள்,
யாரேனும் சொல்லுங்கள்
இடைவெளி தரும்
பெருவலியை
கவனத்தில் கொள்ளும்போது
அன்புகூர்வது இயலுமா என…
- சுசித்ரா மாறன்

x