வெயில் கூடை
சும்மாட்டுக் குழியில்
வாகாக தயிர்க் கூடையை வைத்து
விற்பனைக்குக் கிளம்புகிறாள் பாட்டி.
அதிகாலை வீதிகளில்
விறுவிறுவென நடைபயின்று
வாடிக்கையாளர்களைத் தேடித்தேடி
குரல் கொடுக்கிறாள்.
அவரவர் தேவைக்கேற்ப
தரும் தொகையைப் பெற்று
சிறியதும் பெரியதுமான
முகத்தலளவைப் படிகளால் எடுத்து
பாத்திரத்தில் நிரப்புபவள்
கொசுறெனவும் கூடுதலாய்
கொஞ்சம் முகர்ந்து அளிக்கிறாள்.
அன்றைய கடைசி வாடிக்கையாளருக்கு
அளந்தது போக எஞ்சிய தயிரை
மொத்தமாகக் கவிழ்த்துவிட்டு
வீடு திரும்புபவளின்
வெற்றுக் கூடையில் சுமந்து போகிறாள்
நன்றியோடு வெயிலை!
- பாப்பனப்பட்டு வ.முருகன்
நாகரிகக் கோடுகள்
சிணுங்கத் தொடங்கியதுமே
அணைத்துக்கொள்ள
காதுக்குக் கற்றுத் தந்திருக்கிறாள் அவள்.
வீறிட்ட அழுகுரலோ
வீதிக்குக் கேட்டாலும்
மார்பினில் பசியாற்றிட
மனதுக்கு உணரவைக்கவில்லை அவள்.
கைபேசி...
கைக்குழந்தை...
முன்னது ஆர்வம் கூட்டும்
பின்னது அழகைக் கெடுக்குமோ?
- கனகா பாலன்