எம்.விக்னேஷ்
vignesh.madurai@gmail.com
இப்பெல்லாம் புதுசா வீடு கட்டுறது பெரிய விஷமில்லங்க... ஆனா, அதுக்கு அட்ரஸ் சொல்ற வேலை இருக்கு பாருங்க... யய்யாடி!
எத்தனை நாளைக்குத்தான் வாடகை வீட்லயே குடியிருக்கதுன்னுட்டு எக்ஸ்டென்ஷன் ஏரியாவுல ஒரு ஃபிளாட்ட வாங்கி நம்ம வசதிக்கேத்த மாதிரி சின்னதா ஒரு வீட்டைக் கட்டுனேங்க. அது ஒரு முட்டுச் சந்து ஃபிளாட்டுங்கிறதால அடையாளம் கண்டுபிடிக்கிறது கொஞ்சம் சிரமம்தான்.
புது வீட்டுக்கு குடிவந்து ஒரு வாரம் ஆகியிருக்கும். ஆபீஸ்ல இருக்கப்ப செல்போன் சிணுங்குச்சு. எடுத்துப் பேசுனா, “சார்... உங்க வீட்டுக்கு எப்டி வர்றது?”ன்னு எதிர் முனையில இரு குரல். “ஆமா... நீங்க யாரு கிரஹப்பிரவேசமெல்லாம் முடிஞ்சு ஒருவாரம் ஆச்சுதே”ன்னு அப்பாவியா கேட்டேன். “அட அதில்ல சார்... ஆன்லைன்ல நீங்க ஆர்டர் பண்ணுன டி ஷர்ட் வந்துருக்கு. டெலிவரி பண்ணணும். அதுக்குத் தான் உங்க வீட்டுக்கு வர்ற வழி கேக்குறேன்”னு அந்தாளு சொன்னுச்சு.
“புதுசா கட்டுன வீடுப்பா... பாத்தாலே தெரியுமே”ன்னு சொன்னேன். “என்ன சார் திருப்பதியில நின்னுக்கிட்டு, ‘மொட்டை அடிச்சவர பாத்தீங்களா?’ன்னு கேட்ட கதையா இருக்கு. எக்ஸ்டென்ஷன் ஏரியாவுல நின்னு பாத்தா எல்லா வீடுமே புதுசாத்தானே தெரியுது”ன்னு அந்த மனுஷன் என்னைய வாருச்சு. அப்டி இப்டி தொண்டைத் தண்ணி வத்த அடையாளத்தைச் சொல்லி டி ஷர்ட்டை வீட்டுக்கு வரவெச்சேன்.