புதிதாய் ஓர் எழுத்து


கணேசகுமாரன்
ganeshkumar.k@kamadenu.in

எடுத்துக்கொண்ட கதைக்களம், கதை சொல்லல் முறை, புத்தக வடிவமைப்பு என்று எல்லாவற்றிலும் தனித்துவமிக்கத் தொகுப்பு. தொகுப்பின் முதல் கதையான ‘உடல்’ கதையின் நாயகனுக்கு பதின்பருவத்தில் ஏற்படும் அசாதாரண அனுபவத்தை முன்வைத்து கட்டமைக்கப்பட்ட கதை. இறந்த உடலின் மீது நகரும் பூரான் வாசகரின் மனதிலும் ஊர்ந்து செல்லும்படி எழுதியிருப்பது கதாசிரியரின் பலம். அதேபோல் ‘வாசனாதி’ கதையில் வரும் அத்தர் தயாரிக்கும் முறை பற்றிய சிறு குறிப்பில் கூட மென்மையான ரோஜாப்பூவைக் கொதிக்க வைத்து தயாராகும் வாசனை வாசகரின் எண்ணத்திலும் வலியுடன் பூசப்படுகிறது. கதையின் மர்மமான கதாபாத்திரமான அதே சமயம் தவிர்க்க முடியாத கண் தெரியாத இசைக் குறிப்பாளனைப் பற்றிய வர்ணிப்பில்... ‘ மாபெரும் இசைக் கலைஞன் இழுத்துக் கட்டப்பட்ட தந்திக் கம்பிகளில்  ஒவ்வொரு கம்பிகளிலும் ஒவ்வொரு வாசனை திரவியத்தை விரவியிருப்பார். அவர் ஒவ்வொரு கம்பியை நிமிட்டும்போதும் அதிலிருந்து இசையும் வாசனையும் தெறிக்கும்...’ என்று எழுதிப்போகும் வரிகளில் கதை ஆசிரியரின் எழுத்துச் சித்திரம் அற்புதமாய் வெளிப்படுகிறது.

‘தேடல்’ கதை மறக்க முடியாத அனுபவமாய் இதயத்தின் ஆழமான கீறலாய் படிகிறது. கதையின் போக்கு செல்லும் விறுவிறுப்பும் முடிவும் அட்டகாசமாய் உள்ளன. லாட்ஜ் அறைக் கதவுகள் திறந்து மூடும் காட்சியில் மட்டும் தமிழ் சினிமா ஞாபகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. ‘உடைப்பு’ கதையில் சிறைச்சாலையிலிருந்து வெளியேறும் மிருகங்களும் பறவைகளும் மன நலம் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துகொள்ளும் எழுத்திலும் திறமை பளிச்சிடுகிறது. மைக்கேல் ஏஞ்சலோ என்ற புகழ்பெற்ற ஓவியரின் வாழ்வில் நடந்ததுபோல் அல்லது நடந்திருக்கக் கூடிய சம்பவத்தை மிகு புனைவாகச் சொல்லப்படும்  ‘நீல நிறம்’ கதையில் இமேஜ் விவரிப்பில் பிரமிக்க வைக்கிறது. தொகுப்பின் இரண்டாம் மூன்றாம் கதைகள் வேற்று நிலத்தில் நடந்து அந்நியத்தன்மையைத் தோற்றுவித்திருக்க சட்டென்று விருதுநகர், பழனி என்று விரியும் ‘சிறை’  கதை மனதுக்கு மிக நெருக்கமாகிறது. சிறையிலேயே கழியும் பழனியின் 20 வருட வாழ்க்கைதான் கதை. கதை முடிந்தபிறகும் சிறை வாழ்க்கை தொடர்வது போல் முடிந்திருக்கும் கதையில் பழனி தன் மகள், மனைவியைத் தேடாமல் உடல் சுகம் தேடி பாலியல் தொழிலாளியிடம் செல்வது ஒட்டவில்லை. பழனி தன் மகளுக்கு எடுக்கும் சட்டையும் மகளின் சட்டையையே எடுக்கும் இரண்டு காட்சிகள் எவ்விதத் தாக்கத்தையும் வாசகருக்கு ஏற்படுத்தவில்லை. பழனி நல்லவனா கெட்டவனா என்ற கேள்வி வேறு தொக்கி நிற்கிறது.

1950 களில் நடப்பதாய் கூறப்படும் ‘மயில்’ கதை புனைவில் ஆச்சரியப்படுத்தினாலும் விவரணைகள் வழியே முழுக் கதையும் விரிவது உணர்வு ரீதியாக அசைக்கவில்லை. ‘யேசு’ கதையும் வேறு எதையோ உணர்த்தவந்து சப்பென்று முடிகிறது. தொடக்கக் கதைகளில் வெளிப்படும் அந்நியத்தன்மை உறுத்தல் தவிர புதிய வாசக அனுபவத்துக்கு உத்தரவாதம் தரும் தொகுப்பு.  

x