ஈஜிபுத்து வெங்காயம் இதயத்துக்கு நல்லது!


வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

ஞாயிற்றுக்கிழமையும் அதுவுமாக நண்பகல் வரை நன்றாகத் தூங்கி, பின் துயிலெழுந்ததும் கபகபவெனப் பசிக்கத் தொடங்கியது பாச்சாவுக்கு. செல்போன் செயலி மூலம், சிற்றுண்டியை ஆர்டர் செய்யலாம் என்று யோசனை சொன்னது பறக்கும் பைக். பூர்வாசிரமத்தில் மின்னணு இயந்திரமாக இருந்தாலும் மனித சகவாசத்தில் மசால் வடைகளைத் தின்னும் மனிதாத்மாவாக மாறியிருந்தது பைக். வெங்காய விலை புண்ணியத்தில் ‘சட்னிக்கு மட்டும் 200 ரூபாய். இட்லி இலவசம்’, ‘ராய்த்தா 300 ரூபாய். பிரியாணி இலவசம்’ என்று செயலி காட்டிய விலைப்பட்டியலால் செய்வினை வைக்கப்பட்டவர்கள் போல் சிலையான பாச்சாவும் பைக்கும் வேறு வழியின்றி அடையாள உண்ணாவிரதத்தைத் தொடங்கியபடி, அன்றைய பேட்டிகளுக்கு ஆயத்தமானார்கள்.
போகும் வழியில், ‘ஒரு தரம் ஒரே தரம்…’ என்று ஊராட்சிப் பதவிகளுக்கு ஏலம் நடக்கும் காட்சிகளைப் பார்த்துக்கொண்டே பறந்தபோது, “பாதி மாமாங்கத்துக்கு அப்புறமாச்சும் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவாங்கன்னு பார்த்தா, ஊருக்கூர் ஏலம் போட்டு ஏட்டிக்குப்போட்டி பண்ணிட்டு இருக்காங்களே. இந்த மனுசங்க டிசைனே மர்மமா இருக்குதே” என்று அலுத்துக்கொண்டது பைக். “உனக்கென்னப்பா, நீ எந்திரம். உங்க சமூகத்துல இப்படியெல்லாம் சங்கடமே வராது. நாங்க அப்படியா?” என்று பெருமூச்சுவிட்ட பாச்சா, அறிவாலயத்தில் போய் இறங்கினான்.

“தேர்தலைச் சந்திக்கிறதெல்லாம் இருக்கட்டும், தினம் தினம் வந்து திடுக்கிடவைக்கிற பிரச்சினைகளைச் சமாளிக்க வழி சொல்லுங்க” என்று பிரஷாந்த் கிஷோரிடம் பேசிக்கொண்டிருந்தார் திமுக தலைவர்.

பைக் மீதமர்ந்து பறந்துவந்த பாச்சாவைப் பார்த்ததும் பரவசமடைந்த பிரஷாந்த் கிஷோர், “ஸ்டாலின் ஜி. இந்த மாதிரி ஒரு பைக்கை ஆர்டர் பண்ணிடலாம். நடைப்பயணமெல்லாம் வைகோ காலத்துலேயே வழக்கொழிஞ்சு போச்சு. ‘மோட்டு – பத்லு’ யுகத்துல வானத்துல வாகனம் ஓட்டினாதான் வரவேற்பு கிடைக்கும். ஆர்டர் பண்ணிடலாமா?” என்று ஆர்டர் போடுவதுபோல் சொல்ல, ‘சும்மாவே, கட்சிக்குள்ளே ஆளுக்காள் எதிர்த்துப் பேசிட்டு இருக்காங்க. பறக்கும் பைக் வாங்கிக்கொடுத்தா, பக்கத்துக்குக் கட்சிக்குப் பறந்துபோய் பாகப் பிரிவினை பண்ணிடுவாங்க. இந்தாளு என்கிட்ட காசு வாங்கிட்டு, எடப்பாடி ஜெயிக்க ஏற்பாடு பண்றான் போல…’ என்று கிலேசமடைந்த ஸ்டாலின், “அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். நான் வாட்ஸ்-அப் வீடியோ கால்ல வந்து பேசிக்கிறேன்” என்று உஷாராக அவரை வழியனுப்பிவைத்துவிட்டு, பாச்சா பக்கம் திரும்பினார்.

x