‘சைபர்’ தாக்குதலில் சாய்ந்த குமாரசாமி!


வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

“ஊராட்சி, உள்ளாட்சி, உள்ளாற, உல்லால…" என்று உடல் நடுங்க உளறியபடி உறங்கிக்கொண்டிருந்தான் பாச்சா. “பயபுள்ள பாவம்… உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா நடக்காதான்னு டிவியை உத்து உத்துப் பார்த்து இப்படி உடம்பு சரியில்லாம போய்ட்டானே” என்று அவனைப் பரிதாபமாகப் பார்த்துக்கொண்டிருந்த ‘பறக்கும் பைக்’, ஒருகட்டத்தில் உளறல் தாங்க முடியாமல் பாச்சாவைத் தட்டி உசுப்பிவிட்டது. பதறிப்போய் எழுந்து அமர்ந்த பாச்சா, காலைக் கடமைகளை முடித்துவிட்டு, வேலைக் கடமைக்கு ஆயத்தமானான்.
முதலில் பெங்களூரு. தேவ கவுடா வீடு.

மாலத்தீவு மகளிர் அணியினரில் எட்டு பேர் டக்-அவுட் ஆன தெற்காசிய மேட்சைத் திகைப்புடன் டிவியில் பார்த்துக்கொண்டிருந்தார் தேவ கவுடா. அருகில் தேம்பித் தேம்பி அழுதபடி குனிந்து அமர்ந்திருந்தார் குமாரசாமி.

“என்னாங்க சார், பூராம் ‘டக்-அவுட்’ போல?” என்று தந்தையும் மகனையும் தர்மசங்கடப்படுத்தியபடி தனது பணியை ஆரம்பித்தான் பாச்சா. எடியூரப்பாவே நேரில் வந்துவிட்ட எரிச்சலில் அப்பாவும் மகனும் ஆத்திரப் புன்னகை வீசினர்.
“பேசாம காங்கிரஸ்கூட கூட்டணி வச்சிருந்தா பாதிக்குப் பாதியாச்சும் ஜெயிச்சிருக்கலாம்னு சொல்றாங்களே. இப்படி சைபர் வாங்கிட்டு வந்து நிக்கிறீங்களே… பிராக்ரஸ் கார்டுல அப்பா எப்படி சைன் போடுவார்?” என்று குமாரசாமியைச் சீண்டினான் பாச்சா.
“என்னய்யா பண்ணச் சொல்றே? இந்தத் தேர்தல்லயும் மேடைக்கு மேடை அழுதுவச்சு ஆதரவு கேட்டேன். பாசமா ஆறுதல் சொல்லிட்டு, கடைசியில பாஜகவுக்கு ஓட்டு போட்டுட்டாங்க பாவிப் பயபுள்ளீங்கோ… ஹூம்” என்று மூக்குச் சிந்தினார்.
“எடியூரப்பாவைப் பாருங்க… ஆளானப்பட்ட அமித் ஷாவோட ஆதரவே இல்லைன்னாலும் அதைப் பத்திக் கவலைப்படாம சிரிச்சிக்கிட்டே ஜெயிச்சுட்டார். இப்படி பொழுதன்னைக்கும் புலம்பி அழுதுக்கிட்டே இருந்தா ஓட்டு எப்படிப் போடுவாங்க. இதென்ன ரியாலிட்டி ஷோவா?” என்று பாச்சா கேட்க, “சரி, மேட்ச் முடிஞ்சிருச்சு. சேனலை மாத்த வேண்டியதுதான்” என்றார் தேவ கவுடா சலனமில்லாமல்.

x