சூரிய ருசியும் ஆசையின் நிறமும்


கணேசகுமாரன்
ganeshkumar.k@kamadenu.in

இனி மீன்களை மனிதர்களைப் போலவும் மனிதர்களை மீன்கள் போலவும் யோசிப்பதை தயவுசெய்து விட்டுவிடுங்கள் என்று தொகுப்பின் மூன்றாவது கவிதையில் வேண்டுகோள் விடுக்கும் கவிஞர் தொகுப்பின் முதல் கவிதையில் நீரின் சாயலில் மணலாற்றில் நடக்கும் பெண்ணின் கூந்தல்நதியில் மீன்களாகி நீந்தும் காலடித் தடங்கள் எனக் குறிப்பிடுகிறார். நவீனக் கவிதைகள் முரண்கள் அடங்கியதே என்ற பொதுக்கருத்துக்கான உதாரணமாய் தொடங்குகிறது தொகுப்பு.

சூரியனின் வெப்பம் குறித்துத் தொடங்கும் இன்னொரு கவிதை சூரியனின் வாசனையில் முடிந்து முன்பான அனுமானத்துக்குக் கட்டியம் கூறுகிறது. அம்மா, அப்பா, குழந்தை படிமம் தவிர்த்துப் பார்த்தால் ‘மீன்கொத்தி’ கவிதை நல்லதொரு அனுபவம். அதுபோல் என் கனவிலிருந்து வெளியேறிய யாசகனை உன் கனவில் கட்டிப் போடும் கவிதையும் பிரமாதமான கவிதையாய் அழகாய் விரிகிறது. பாவனையால் தண்ணீர் குடித்துக் கவிதை பேசும் சமூக அக்கறை கவிதை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு செவிட்டில் விழுந்த அறையாகிறது. சொல்ல வந்ததைக் கவிதையில் நின்று நிதானித்துப் பேசும் ‘நிலக்கடலை வியாபாரி’ கவிதை போல் இன்னும் பல கவிதைகள் இருந்திருக்கலாம். ஓர் ஓவியத்தின் விளக்க உரையாக சொல்லப்பட்டிருக்கும் ‘கொஞ்சம் எடையுள்ள நிழல்’ கவிதை தலைப்பு கேள்விக்குறியானாலும் கவிதைப் பொருள் நன்று. முன்னிரவு சூல் கொண்டவள், முதுவெனிலில் பூப்பெய்பவள் என்று அங்கங்கே கிராமத்து நிழலும் வெயிலில் தென்படுகிறது.

’சலூன் கடை’ கவிதை பிரமாதமான சிறுகதை ஒன்றை உள்ளடக்கிய வண்ணம் விரிகிறது. ஆசிரியர் மறு பரிசீலனை செய்யலாம். ‘நடுவிரல்’ கவிதை வெளிப்படுத்தும் அதிர்ச்சி வேறு மாதிரியிருக்க, ‘தக்கை’ கவிதையோ பகீரென்கிறது. தொகுப்பின் அனைத்து அபத்தங்களையும் மன்னிக்கச் செய்கிறது ‘பூவிலிருந்து செல்லும் அழகி’ கவிதை. அந்தப் படிமத்துக்காகவே அதில் தென்படும் மனிதத்துக்காகவே வாழ்த்தலாம் கவிஞரை. டால்பின்கள் முத்தமிடும்போது எவ்வளவு பெரிய மீசை என்று அங்கங்கே ரசிக்கத்தகுந்த படிமங்கள். ‘பிள்ளைக் கணக்கு’, ‘ஓய்வு’ கவிதைகள் மட்டுமல்ல; இன்னும் பல கவிதைகள் குழந்தைகளின் உலகை அருகாமையில் நின்று கணித்துப் பேசுகின்றன. அழகியல் மிதக்கின்றன அவற்றில்.

x