பிரஸ் மீட்டுக்குத் தடை- ‘ப்ரியமணி’ திட்டம்!


வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அருகே, அதைவிடப் பல மடங்கு பெரிதாக, பளபளப்பாக இருந்தது அந்தப் புதிய கட்டிடம். கேட்டுக்கு வெளியில் நீண்ட க்யூ அண்ணா சாலையைத் தாண்டி மெரினா பீச்சைத் தொட்டு மிரளவைத்தது. கடல் வழியாக நீந்திவந்து அந்த நீண்ட க்யூவில் இடம் பிடிக்க நிறைய பேர் போட்டி போட்டுக்கொண்டிருந்தார்கள். அது நிகழ்கால அதிசயமாம் நித்யானந்தாவின் தேசமான ‘கைலாசா’வின் தூதரகம் என்பதை ஆகாய வழியாகப் பார்த்து ஆச்சரியானுபவத்தில் உறைந்திருந்த பாச்சா, “எனக்கும் இடம் போட்டு வைங்கய்யா” என்று கத்திக் கதற, தூக்கம் கலைந்த எரிச்சலில் திட்டத் தொடங்கியது பைக். “எல்லாம் கனவா?” என்றபடி எழுந்த பாச்சாவை, “அத்தனை கனவும் நனவானாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை. சிம்புவே திரும்ப ‘மாநாடு’ படத்துல நடிக்க ஆரம்பிச்சுட்டார். வா ராசா பொழப்பப் பார்க்கலாம்” என்படியே மிச்சம் இருந்த கனவுக்குள் கைவிட்டு அவனை இழுத்து வெளியே போட்டது பைக்.

அன்றாடப் பணி தொடங்கியது. முதலில் அமைச்சர் ஜெயக்குமார்.

வெள்ளை வேட்டி சட்டைக்கு மேல், அரைக்கை வெள்ளைக் கோட்டு போட்டுக்கொண்டு வேக வேகமாக நடந்துகொண்டிருந்தார்.
“இதென்ன சார், புதுசா டாக்டர் வேஷம்... அதுக்குள்ள அரசியல் வெறுத்துடுச்சா?” என்று வெறுப்பேற்றினான் பாச்சா.
சட்டென்று திரும்பி உற்றுப்பார்த்த அமைச்சர், “உனக்கு விஷயமே தெரியாதா, திமுக கட்சியையே அவசர வார்டுல சேர்த்துருக்காங்களாம்… அவங்களுக்குத்தான் தேர்தல்னா ஜுரமாச்சே… அதான் ‘ட்ரீட்மென்ட்’ குடுக்கலாம்னு போறேன்” என்று கண்கள் சுருங்கக் கலகலப்பாகச் சிரித்தார்.

x