ஜெ.சரவணன்
saravanan.j@kamadenu.in
ஓவிய உலகில் 19-ம் நூற்றாண்டில் இம்ப்ரஸனிச ஓவியங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. ஆனால் சில ஓவியர்களின் உன்னத முயற்சிகளால் 20-ம்நூற்றாண்டில், பின் இம்ப்ரஸனிச ஓவியங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. அதற்கு ‘ஃபாவிசம்’ எனப் பெயரிட்டனர். இந்தப் பாய்ச்சலுக்குக் காரணமானவர்களில் பால் செசான் முக்கியமானவர். மற்றவர்கள் வின்சென்ட் வான்காவும், பால் காகினும் ஆவர்.
பின் இம்ப்ரஸனிச ஓவியங்களில் குறிப்பிடத்தக்க அம்சம் வண்ணங்கள். ஓவியர்களின் உணர்வுகள் பார்வையாளனுக்கு வண்ணங்கள் வழியாகக் கடத்தப்பட்டன. மிகச் சாதாரண காட்சிகளையும் கலை நயமிக்கதாக மாற்றும் அற்புதத்தை இந்த ஃபாவிச ஓவியங்கள் நிகழ்த்தின. அதிலும் பால் செசான் நிலக்காட்சி ஓவியங்களையும், மனிதர்களையும் வரைவதில் சிறந்து விளங்கினார். ஓவியத்தைத் தீர்மானிக்கும் முழு சுதந்திரத்தையும் பார்வையாளனின் கற்பனைக்கே ஓப்படைத்துவிடுவது அவருடைய தனித்துவம்.
செசானின் தந்தை வட்டிக்கு விடுபவர். மகனையும் சட்டம் படிக்க வைத்து வட்டி தொழிலில் இறக்கிவிடத் திட்டமிட்டிருந்தார். ஆனால், செசானுக்கு ஓவியத்தின் மீதுதான் உயிரே இருந்தது. பல நெருக்கடியான தருணங்களில் இவரது நண்பர் எமிலி ஜோலாதான் உறுதுணையாக இருந்து அவருடைய உண்மையான பாதையிலிருந்து விலகாமல் பார்த்துக்கொண்டார். பிசாரோ என்ற இம்ப்ரஸனிச ஓவியரிடம் சிஷ்யராகச் சேர்ந்து ஓவியத்தின் நுணுக்கங்களைக் கற்றார் செசான். ஆனால், ஓவியத்தில் எவருடைய பாணியையும் பின்பற்றாத இவர், க்யூபிசம், ஃபாவிசம், சிம்பாலிசம், எக்ஸ்ப்ரஸனிசம் என அனைத்தையும் கலந்த கலவையாக இருந்தார். இவரிடமிருந்து சக ஓவியர்கள் பல வழிகாட்டல்களைப் பெற்றனர்.