மழைக் கவிதை!
தெருவோரக் குழந்தைகளை
தலைக்குக் குளிப்பாட்டுகிறது மழை.
மண் தாயின் தோள்களில்
துள்ளிக் குதிக்கின்றன
மழைக் குழந்தைகள்.
குழந்தைகளைக்
கப்பல் விட வரச்சொல்லி
விழுந்து அழும் மழை,
கப்பல் விடாத
கணினிக் குழந்தைகளைக்
கடிந்துகொண்டே
நெகிழிக் குப்பைகளை
நகர்த்திக்கொண்டிருக்கிறது.
கொட்டும் மழையில்
கூட்டுக்குள் முடங்கிய
பறவையொன்று
குஞ்சுகளுக்கு
மழையை ஊட்டுகிறது.
- காசாவயல் கண்ணன்
பயணக் கனவு
யாருமற்ற அமைதியான
நீண்டதொரு ரயில் பயணத்தில்
காரணமின்றி இறக்கிவிடப்படுகிறேன்.
எதுவென்றறியாத புதிய உலகில்
ஆழத் தடம் பதித்து பழகிய கால்கள்
ஓசையின்றி நடக்கின்றன ஈர நிலத்தில்.
திறந்த வெளி எங்கும்
பரந்த நீர்ப்பரப்பு திகிலூட்டுகிறது.
கால்கள் அற்ற அவயங்கள்
மனதால் நீந்திப் பழகுகின்றன.
எதிர் கரையை அடைய
பயம் தெளிந்த உடல் கதகதப்பாகி
தன்னை ஒப்பளிக்கிறது எதிர்நீச்சலுக்கு.
ஆழ மூச்சிழுத்து அழுத்தும் மாயங்களை
சுவாசிக்க விடாமல் செய்கிறேன்.
மயிர்க்கூச்செறிந்த புனைவு
புலப்பட்டபோது என் நீர்மத்தை
உறிஞ்சிய பந்தம் எனை ஆழ அழுத்துகிறது.
இரவின் மயான அமைதியைக் குலைத்த
மழையின் பெரும் சத்தத்தில்
திடுக்கிட்டு விழிக்கிறேன்.
- ஸ்ரீகா