மாமோய் நீங்க எங்க இருக்கீங்க..! 


ரிஷபன்
rsrinivasanrishaban@gmail.com

சொர்க்கத்துக்குப் போனாலும் கக்கத்துல புள்ளைன்ற கதையா எங்கயாச்சும் நிம்மதியா போகலாம்னு நினைச்சா அப்பத்தான் தொயரம் ஏதாச்சும் நம்மள தொடர்ந்து வரும்!

சென்னையில சொந்தத்துல ஒரு கல்யாணம். ரயில்ல ஏறி உட்கார்ந்ததும்தான் பார்த்தோம். நேர் எதிர் சீட்டுல அவரு. “அட, மாமா... நீங்களா?”ன்னு கேட்டதும் முறைச்சாரு. “சொந்த பந்தம் விட்டுப் போகாம இருக்கணும்னுதான் உம் பொண்டாட்டிக்கு போன் போட்டேன். அவ கடைசி வரை வாயே தொறக்கல! நாம எல்லாரும் ஒரே கல்யாணத்துக்குத்தானே போறோம்... ஒண்ணா போனா என்னா கொறஞ்சிரப் போவுது”ன்னாரு. இவளைத் திரும்பிப் பார்த்தா ஜன்னல் வழியா வெளியே வேடிக்கை பார்த்துக்கிட்டிருக்கா.
“ஹிஹி. எனக்குத் தெரியாது மாமா... ஆபீஸ்ல வேலை. லேட்டா தான் வந்தேன் டிக்கட்டே தட்கல்லதான் போட்டேன். லீவு கிடைக்குமா கிடைக்காதான்ற டவுட் இருந்ததால கடைசி நேரத்துலதான் பயணம் கன்ஃபார்ம் ஆச்சு”ன்னு சொன்னேன். நல்லா சமாளிக்கிறேன்னு அவருக்குத் தெரிஞ்சு போச்சு. பெருசா ரியாக்‌ஷன் காட்டிக்காம இருந்தாரு. ஒரு கேப்ல அவரு அந்தாண்ட எந்திரிச்சுப் போனதும் இவளைக் கேட்டா. “ஆமா சொல்லல... தொணதொணன்னு போட்டுத் தள்ளிருவாரு. அதனால வேணாம்னு விட்டேன். இப்படி மாட்டிக்குவோம்னு யாருக்குத் தெரியும்... இவ்ளோ பொட்டி இருக்கற ரயில்ல அந்தாளு இருக்கிற சீட்டுக்கு எதிர்லயே புக் பண்ணி வச்சிருக்கீங்க”ன்னு ரொம்ப நீளமா போச்சு அர்ச்சனை. நல்லவேள, போன மாமா திரும்பி வந்து நெஞ்சுல பால் வார்த்தாரு!
“ரயில்ல போனாத்தான் வசதி... பாத்ரூம் போக சிக்கல் இல்ல”ன்னு நான் கேட்காமயே தகவல் சொன்னாரு மாமா. அந்த நேரம் பார்த்து, “இஞ்சி டீ... சாய் சாய்”னு ஆள் வந்தாப்ல. எனக்கும் இவளுக்கும் டீ சொல்லிட்டு, “மாமா டீ குடிக்கிறீங்களா?”ன்னு கேட்டேன். “யாருக்கும் டீ வேணாம்பா”ன்னு சொல்லி அந்த மனுஷன அங்கிட்டு அனுப்பிட்டு, “என்ன மாப்ள... இவ்ளோ அலட்சியமா இருக்கீங்க. ஏம்மா இவருக்கு எடுத்துச் சொல்றதில்லியா?”ன்னு அவளையும் கோத்து விட்டார். “நான் சொன்னா கேட்டாத்தானே”ன்னு அவ பங்குக்கு மையமா ஒண்ணு விட்டா.

“டீ குடிக்கிறதுல என்னய்யா கொலைக் குத்தம்?”னு மாமாவைக் கேட்டேன். சத்தமா சொன்னாரு...‘புத்தி கெட்ட மனுசன்யா நீ... டீக்கு தண்ணி எங்கே புடிக்கிறாங்கன்னு ஒரு வீடியோ வந்துச்சே... பார்க்கலியா... டாய்லட்ல புடிக்கிறாங்க.”

x