ரகசிய ஓலத்தின் குறிப்புகள்


கணேசகுமாரன்
ganeshkumar.k@kamadenu.in

கவிதைப் பரப்பில் அழுத்தமாகத் தன் பெயரைப் பதிந்திருக்கும் நேசமித்ரனின் புதிய கவிதைத் தொகுப்பு நன்னயம். தனது முந்தைய கவிதை பாணியிலிருந்து சற்றே விலகி வந்திருக்கும் நேசமித்ரன் நீண்ட கவிதைகளில் பெரிய வாழ்வைப் பதிவு செய்திருக்கிறார். தகப்பனாய் இருத்தல் தலைப்பிட்ட கவிதையில் பல தகப்பன்கள் தங்கள் முகம் பார்த்துக்கொள்ளலாம். ‘எல்லா நஞ்சையும் வடிகட்டும் நுரையீரலாய்’ தன்னை மாற்றிக்கொள்ளும் அத்தனை அப்பாக்களுக்கும் சமர்ப்பணமாய் மனதில் படிகிறது கவிதை.

நேசமித்ரனின் பெரும் பலமே படிம உத்திகளே. எவரும் எளிதில் யோசிக்க முடியாத படிமங்களை யாரும் எதிர்பாரா இடங்களில் பொருத்திப் பார்ப்பது கவிஞர் நேசமித்ரனுக்குக் கைவந்த கலை. ஒரு கவிதைக்கு உழைப்பது குறித்து அவர் தரும் படிமம் சற்றே அதிர்ச்சியுடன் தன்னைக் கவனித்துப் பின் நகர்கிறது.

‘ஒரு கவிதைக்கு உழைப்பது
குழந்தைக்கு ஊதித்தரும்
பலூன் சந்தோஷம்
சமயத்தில் பலியிடவென்று
வளர்த்து நம்மை நாமே தின்பது’  

x