ஜெ.சரவணன்
saravanan.j@kamadenu.in
இயற்கையின் அற்புதங்களில் மிக அலாதியான விஷயங்கள் இரண்டு. ஒன்று கடல், மற்றொன்று நிலா. இரண்டையும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ரசித்து லயித்துக்கொண்டிருக்கலாம். அப்படித்தான் நிலவைப் பார்ப்பதிலேயே லயித்துப் போய் தன்னுடைய வேலை, பசி, தூக்கம் எல்லாவற்றையும் மறந்துபோனார் ஓவியர் காஸ்பர் டேவிட் ஃப்ரெட்ரிக்.
ஜெர்மானிய ஓவியரான ஃப்ரெட்ரிக் 18-ம் நூற்றாண்டின் புகழ்மிக்க ஓவியர் ஆவார். இவர் 1819-ல், வரைந்த Two Men Contemplating the Moon என்ற ஓவியம் உலகப் பிரபலம். இதே ஓவியத்தை அடுத்தடுத்து சில மாற்றங்களுடன் இரண்டு முறை வரைந்திருக்கிறார்.
முதல் ஓவியத்தில் வசந்த கால இரவில் இருவர் நிலவைப் பார்த்து ரசித்து தங்களுக்குள் ஏதோ பேசிக்கொள்கிறார்கள். தூரத்தில் பிறை நிலவும் அதன் அருகே ஒரு மாலை நேர நட்சத்திரமும் ஒளிர்கிறது. நிலவின் ஒளி அவர்கள் நிற்கும் இடத்தின் அருகே உள்ள ஓக் மரங்களின் கிளைகளில் பரவிக்கிடக்கிறது. ஓவியத்தில் உள்ள இருவரில் ஒருவர் ஃப்ரெட்ரிக் இன்னொருவர் அவருடைய மாணவர் என்று சொல்லப்படுகிறது.
இரண்டாவது ஓவியம் சற்றுத் தெளிவான வண்ணங்களைக் கொண்டதாகவும், பச்சைப் பசேலனவும் உள்ளது. மூன்றாம் ஓவியத்தில் முந்தைய இரண்டு ஓவியங்களில் இருந்த ஃப்ரெட்ரிக்கின் மாணவருக்குப் பதிலாக ஒரு பெண்ணை வரைந்திருக்கிறார். இந்த ஓவியம் ஃப்ரெட்ரிக்கின் திருமணத்துக்குப் பின் 1830-ல், வரையப்பட்டதால் அது அவருடைய மனைவியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Two men contemplating the moon ஒவியத்தின் சிறப்பே அதன் வண்ணங்கள்தான். அடர் வண்ணங்களைப் பயன்படுத்திய விதமும், அந்த அழகிய காட்சியின் கட்டமைப்பும் கோணமும், தத்ரூபமான நிலவுக் காட்சியும், தடித்த பருமனான ஓக் மரமும் அதன் பின்னே காடு என மிக அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.