ஹாட் லீக்ஸ்: அரசியல் நொறுக் எனில்... அப்படியே ருசிக்கலாம்!


அரசியல் நொறுக் எனில்... அப்படியே ருசிக்கலாம்!

குலசாமி கோயிலில் தமிழிசைஎந்தவொரு நல்ல காரியத்தைத் தொடங்கினாலும் எந்தவொரு நல்ல காரியம் நடந்தாலும் குலசாமி கோயிலுக்குச் சென்று வழிபடுவது தமிழிசை சவுந்தரராஜனின் வழக்கம். அவிநாசியை அடுத்த பெருமாநல்லூர் அருகே உள்ள  மகா பெரியசாமி கோயில் தான் இவருக்கு குலசாமி கோயில். தெலங்கானா ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்டதை அடுத்து கடந்த வாரம், தனது மகன், மருமகள் சகிதம் குலதெய்வத்தை கும்பிட வந்திருந்தார் தமிழிசை. வந்த இடத்தில், கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட தொழில் துறையினர் மத்திய அரசின் சலுகைகள் வேண்டி கோரிக்கை மனு ஒன்றை அவரிடம் கொடுத்தனர். மறுப்பேதும் சொல்லாமல் அதை சிரித்த முகத்துடன் வாங்கிக் கொண்ட தமிழிசை, “நிச்சயம் இந்த மனுவை டெல்லிக்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுப்பேன்” என்று வாக்குறுதியும் கொடுத்தார். ஆளுநராகிவிட்டாலும் தமிழிசைக்கு அரசியல் தலைவருக்கு நிகராக பாஜகவினர் தடபுடல் வரவேற்புக் கொடுத்தது தனிக்கதை!

பெரியவர் வந்தாலும் சின்னவருக்குச் சிக்கல்!

அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கிலும் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைத்துவிட்டால் அடுத்ததாக கார்த்திக்கு சிக்கல் வரலாம். இதுவரை சிதம்பரத்தை சிறைக்குள் வைத்து முடக்கிய மத்திய அரசு, அடுத்ததாக மகனை சிறைக்கு அனுப்பி சிதம்பரத்தை நோகடிக்கலாம் என்கிறார்கள். இதனிடையே, சிவகங்கை தொகுதியில் போட்டியிட எங்களுக்கு வேட்பாளர் தயார் என சமூக வலைதளங்களில் பாஜகவினர் தகவல் பரப்புகிறார்கள். ‘34 வயது இளைஞர், கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர், சங்கத்திலிருந்து (ஆர்எஸ்எஸ்) வந்தவர், தொகுதிக்கு வெளியேஇருப்பவர்’ என்றெல்லாம் பாஜக வேட்பாளர் குறித்த தகவல்கள் தடதடக்கின்றன. இப்படியெல்லாம் தகவல் பரப்பி சிவகங்கை தொகுதிக்கு அடுத்த ஆண்டு நிச்சயம் இடைத்தேர்தல் வரும் என பாஜகவினர் சொல்லிக் கொண்டிருப்பது ஒருபுறமிருக்க, அப்படி இடைத்தேர்தல் வந்தால் தனது மகனை களமிறக்க காங்கிரஸ் பெருந்தலை ஒருவரும்  டெல்லியில் காய்நகர்த்தத் தொடங்கிவிட்டாராம்.  இதனிடையே, நவம்பர் 4-ம் தேதி சிதம்பரத்தின் ஜாமீன் மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அப்போது நீதிமன்றத்தில் திரளாகக்கூடி தலைவருக்கு தெம்பூட்ட வேண்டும் என்று சொல்லி தனது விசுவாசிகளுக்கு தகவல் அனுப்பியிருக்கும் கார்த்தி, “தலைவர் விடுதலையாகும் வரை டெல்லியிலேயே தங்கியிருக்கும்படி புறப்பட்டு வரவும்” என்றும் சொல்லி இருக்கிறாராம்.

x