நிழற்சாலை


அறுபடும் ரசனை

எப்போதோ ஒருமுறை
வந்து பெய்யும் மழை
இப்போது பெய்கிறது.
படர்கிற வெயிலோடு ஊடுருவிய
அபூர்வ மழையை
சிறகு சிலிர்க்க
பார்த்துக்கொண்டிருந்த புறாவுடன்
சேர்ந்துகொண்டேன் நானும்.
நித்யகல்யாணிச் செடிகளின்
உச்சியில்
காற்றோடு சேர்ந்த
மழையின் நடனம்
அத்தனை அற்புதம்.
ஜதி ஒலிகளை
மனம் யோசிக்கத் தொடங்குகையில்
கடிகார அலாரம்
அலறி அழைக்கிறது
எனது அலுவல்களுக்கு.
பரபரப்பு தீப்பிடிக்க
ஆனந்த நடனத்தை
விட்டுவிட்டு ஓடுகிறேன்.
மழை மீதான ஏக்கம்
என் பாதங்கள் பதியும்
தடங்களில்
வெட்டிக்கொண்டிருக்கிறது
ரசனைக்கான புதைகுழிகளை.
- பா.உஷாராணி

பெருங்கனவின் இரவு

காக்கைகள் கழுகாகிப் பறந்து
பருக்கைகள் என்றெண்ணி
விழிகளைக் கொத்துவதான
பெருங்கனவின் பின்
பிய்த்து எறியப்பட்டது தூக்கம்.
தனித்த இரவில்
வேகம் கூட்டித் துடிக்கும்
இதயத்தின் ஒலி
செவிப்பறைகளை முட்டுகிறது
குவளை நிரம்பிய நீரை
மிடறு மிடறாய்ப் பருகி
ஆசுவாசிக்கப் 
பழகிக்கொள்கிறேன் நான்.
- விஜயபாரதி

x