கீழடியில் மோடி டீ கிளாஸ்!


வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

காந்தி ஜெயந்தியும் அதுவுமாகப் பூரண அமைதியுடன் அன்றைய நாளைத் தொடங்கிய பாச்சா, பறக்கும் பைக்கிடம் சற்று நிம்மதியாக அளவளாவிக்கொண்டிருந்தான். அப்போது, ஆசிரியரின் ஆணை வாட்ஸ் - அப் வழியே வந்துவிழுந்தது. பட்டியலைப் பார்த்ததும், ஓய்வெடுக்கும் எண்ணத்தை ஒத்திவைத்துவிட்டு, பைக் மீதேறிப் பறந்தான். அத்தனை சுவாரசியமான பட்டியல்.
முதலில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

நாங்குநேரியில் ‘மக்கள் பணி’யாற்றச் சென்றிருக்கும் அமைச்சர் கூட்டத்துக்கு நடுவே ஆளைப் பிடித்துவிடலாம் என்று அங்கு பறந்தான். அதிமுக செயல்வீரர் கூட்டத்தில் ஸ்டாலினை வறுத்தெடுத்த திருப்தியோடு ஒரு மர நிழலில் ஓய்வெடுக்க வந்தார் திண்டுக்கல் சீனிவாசன். அங்கு சிகரெட்டும் கையுமாக இருந்த தொண்டர் ஒருவரைப் பார்த்ததும், “எம்ஜியார் தொண்டனாய்யா நீ? எவ்ளோ தைரியம் இருந்தா தம்மடிப்பே?” என்று கரகரத்த குரலில் மிரட்ட, தொண்டர் தொடர் ஓட்டமெடுத்து மறைந்தார்.
“ஆஹா… இதுவல்லவோ அமைச்சருக்கு அழகு. புகை மனிதனுக்குக் பகைங்கிறதை உணர்த்திட்டீங்க” என்று பாராட்டுகளுடன் பக்கத்தில் சென்றான் பாச்சா. “இது பரவால்ல தம்பி. கட்சிப் பணிக்குக் காசு வேணும்னு கேட்கிறதை விட்டுட்டு ‘ட்ரை டே வருது. பார்த்துச் செய்ங்க’ன்னு என்கிட்டேயே ஒருத்தன் கேட்கிறான். அறைஞ்ச அறையில ஆயுசுக்கும் குடிக்க மாட்டான்” என்று குலுங்கிச் சிரித்தார் அமைச்சர்.

அவர் கையில் வாடி வதங்கியிருந்த ‘ஒற்றை ரோஜா’வைப் பார்த்ததும், “வழக்கமா யார் வந்தாலும் ஆளுயர மாலையைப் போட்டு அசத்துவீங்க. இதென்ன மோடிக்கு மட்டும் ஒத்த ரோசா?” என்று கேட்டான் பாச்சா.

x