கணேசகுமாரன்
ganeshkumar.k@kamadenu.in
தீக்கொளுத்தி ஆவரான் என்ற தன் முதல் நாவலில் கவனத்துக்கு வந்த பிரபு தர்மராஜின் முதல் சிறுகதைத் தொகுப்பு. நாவலில் அமீரகப் பிழைப்புக்குச் செல்பவர்களின் வலி மிகும் வாழ்வை அவல நகைச்சுவையாக வெளிப்படுத்தி தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட ஆசிரியர் தனக்கான எழுத்து மொழி இதுவே எனத் தீர்மானித்து, கொண்டு வந்திருக்கும் கதைகள். தமிழ் இலக்கியச் சூழலில் கிட்டத்தட்ட அருகிப்போய்க் கொண்டிருக்கும் பகடி எழுத்து வகைக்கு உயிர் நீர் ஊற்றும் முயற்சியாகத் தென்படுகின்றது பிரபு தர்மராஜின் எழுத்து. ஒரு பக்கத்துக்கு பத்து முறை வாய் விட்டு சிரித்து விடலாம் என்ற உத்தரவாதத்துடன் அனைத்துக் கதைகளையும் வாசித்துவிட முடிகிறது.
எல்லா கதைகளின் பொதுவான அம்சமாக குடிப்பழக்கம் வருகிறது. கதையின் முக்கியக் கதாபாத்திரம் தனது குடிப் பழக்கத்தினால் எதிர்கொள்ளும் அனுபவங்களே கதைகள். ஆச்சரியமாய் அதுபோன்ற மனிதர்களை நம் ஊரில், வீதியில், அணுக்கத்தில் கண்டிருப்பதால் எவருமே அந்நியராய் தென்பட வில்லை. இதுவே ஆசிரியரின் முதல் வெற்றி.
தமிழ்நாட்டு வரைபடத்தில் இருக்கும் அல்லது ஆசிரியர் உருவாக்கும் ஊர்ப்பெயர்களே அலாதியான ஒன்றாக உள்ளன. அதுபோல் கதை மனிதர்களின் பெயர்கள். சில இடங்களில் தென்படும் தீவிர எழுத்துத் தன்மையே கதைப்போக்கில் சிரிப்பை வரவைத்துவிடுகின்றன. நாகர்கோவில் தமிழில் ஆசிரியர் விவரிக்கும் வர்ணனைகளில் மெல்லிய நக்கலும் நையாண்டியுமாய் புகுந்து விளையாட புன்னகையை ஏந்திக்கொண்டே வாசிக்க வேண்டியிருக்கிறது. அதிர்ச்சித் தலைப்புகள் கதையின் உள் ஓட்டத்துக்கு உகந்ததாக உள்ளன. ‘சின்ன வயிற்று வலிக்கு பின்னக்காய் பறித்து வரப்போய் காசரளிக் காயைத் தின்றுவிட்டு வாயைப் பிளந்த கடுமுடுக்கிப் பயல்கள் பல பேர் வரலாற்றில் உண்டு’- ‘காளிநாதனின் பரலோகப் பாத யாத்திரை’ கதையில் வரும் இவ்வரி சுய மருத்துவத்தினால் ஏற்படும் ஆபத்தைச் சொல்கிறது. ஆனால் கதை விரிதலில் ஒரு சாராய போத்தல் உள் நுழைய நகைச்சுவை போதை தலைக்கேறுகிறது. ‘மருத்துவர்களின் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் பயில்வானும் கிழவியும் உயிர் பிழைத்து இரண்டு நாட்களில் வீடு திரும்பினார்கள்’ - முதல் வாசிப்பில் சட்டென்று கடந்துவிடக் கூடிய இந்த வரியின் தெறிக்கும் நகைச்சுவை ஆசிரியரின் கைவந்த கலையாக உள்ளது. முப்பிடாதி ஆசான் கதையில் வரும் ‘ஸ்டடி க்ளீன், ஆஃப்டர் தட், ஸ்டாண்ட் அதற்குத் தக’ குறள் விளக்கம் அல்டிமேட் ரகளை. போதை உச்சத்துக்கு ஏறிய நிலையில் வீட்டுக்கு வரும் ஆசான் குறித்து இவ்வாறு சொல்லப்படுகிறது. ‘கடுமையான பானத்தின் முடிவில் வாடகை சைக்கிளானது கைத்தடியாக மாறி ஆசானை வீட்டுக்குக் கூட்டி வந்து கொண்டிருந்தது.’ இந்த வரிக்கான இமேஜ் என்பதை வாசகருக்கு எவ்வித சிக்கலுமின்றி தந்திருப்பது ஆசிரியரின் எழுத்து வன்மை.