நிழற்சாலை


பாச மொழி

எங்கள் வீட்டு
நாய்க்குட்டி புஜ்ஜிமா
அப்பாவின் குரலுக்கு
மட்டுமே அடங்கும்.
மணிக்கணக்கில் அப்பா
அதனிடம் பேசும் மொழி
அதற்கு மட்டுமே புரியும்.
அப்பா இறந்தபோது
நடுகூடத்தில்
கிடத்தப்பட்டிருந்த
அவரது சடலத்தைவிட்டு
அகலாமல் இருந்த
புஜ்ஜிமா பேசியது
அப்பாவுக்கு மட்டும்
புரிந்திருக்கக்கூடும்.
- பர்வீன் யூனுஸ்

ஞாபக வெயில்...

மனப்பரணில் இருந்து
நினைவுகளை
இறக்கிவைத்து
தூசுதட்டுகிறேன்
பசுஞ்சாணம் கரைத்து
மெழுகிய அடுப்பின் மீது
வெள்ளைத் தாமரை
பளிச்சென்று சிரிக்கிறது
அம்மா போட்ட மாக்கோலம்
அடுப்புச் சாம்பல் வழித்து
நுனிப் பல் தேய்த்து
கடுங்காப்பியில்
ஊறவைத்த வறுக்கியோடு
நிரம்பிவிடும்
வயிறும் மனசும்
பாத்திரத்தில் படாமல்
புழக்கடை வழியாக
நீச்சத் தண்ணி
வாங்கிப்போகின்றவளின்
மகளுடன்தான்
‘காக்காக்கடி கல்ல முட்டாய்’
என் வாயில் கரையும்
நுங்குவண்டியிலும்
சைக்கிள் டயரிலும்
உருட்டி விளையாண்ட
பால்ய காலத்தை
பாட்டி சுட்ட வடையோடு
எந்தக் காகம்
கொத்திக்கொண்டு போனது?
- அமுதா தமிழ்நாடன்

x