வான்காவின் உருளைக்கிழங்கு முகங்கள்


ஜெ.சரவணன்
saravanan.j@kamadenu.in

ஓவிய வரலாற்றின் மகத்தான கலைஞன் வின்சென்ட் வான்கா. அவர் பல்வேறு விதமான ஓவியங்களை வரைந்திருக்கிறார். ஆனாலும், ஒரு சில ஓவியங்களே உலகம் முழுவதும் பிரபலமாகப் பேசப்பட்டன. நட்சத்திர இரவு, சூரியகாந்தி மலர், கோதுமை வயல், டாக்டர் காஷெட் உள்ளிட்டவை உலகமே கொண்டாடிய அவரது ஓவியங்கள். ஆனால், உருளைக்கிழங்கு தின்பவர்கள், சோகமான பெண், சிகெரெட் பிடிக்கும் மண்டை ஓடு உள்ளிட்ட பல ஓவியங்கள் வெகு சில வான்கா பிரியர்களைத் தவிர மற்றவர்களுக்குத் தெரியாமல் போனது. காரணம், பிரபலமடைந்த ஓவியங்களில் ஒருவகையான மயக்கும் மாயஜாலம் இருக்கும். அதில் பெரிதாகக் கவலையை உண்டாக்கும் அம்சம் இருக்காது. ஆனால், வான்காவின் பிரபலமாகாத பல ஓவியங்களில் முகத்தில் அறையும் உண்மை வெளிப்படும். அவை அழகையோ, மாயஜாலத்தையோ கொண்டிருக்காது.    

வின்சென்ட் வான்கா 1885-ல், நெதர்லாந்தில் வரைந்ததுதான் இந்த உருளைக்கிழங்கு தின்பவர்கள் என்ற ஓவியம். அப்போது அவருக்கு வயது 32. அப்போதுதான் அவர் ஓவியம் வரையக் கற்றுக்கொண்டிருந்தார்.  இந்த ஓவியத்தை வரைய அவர் கிட்டத்தட்ட ஒரு மாத காலம் எடுத்துக்கொண்டார். அப்போது அவருடைய பாசமிக்க சகோதரர் தியோவுக்கு தன்னுடைய ஓவியங்களையெல்லாம் அனுப்புவார்.

இந்த உருளைக்கிழங்கு தின்பவர்கள் ஓவியத்தில் விவசாயிகளின் நிலை என்ன என்பதை உணர்த்த விரும்பினார். உருளைக்கிழங்கு மட்டுமே உணவாக எடுத்துக்கொள்ளும் அந்த விவசாயக் குடும்பத்தினரின் முகங்களையும் உருளைக்கிழங்கு போலவே வேண்டுமென்றே ஒழுங்கற்று கோணலாக இருக்கும்படி வரைந்தார். ஆனாலும் அவர்கள் தங்கள் கைகளால் நிலத்தை உழுது பயிரிட்டு விளைவித்த உருளைக்கிழங்குகளை உண்கின்றனர். அந்த உணவு அவர்களுடைய உழைப்புக்காகக் கிடைத்தது என்று தன் சகோதரர் தியோவிடம் மகிழ்ச்சியோடு கூறினார்.

x