‘பெர்த்’த வாங்குனேன்... தூக்கத்த வாங்கல!


உத்ரா
uthraperumal@gmail.com

“பஸ்லயே போறீங்களே... ஒருதடவ ரயில் பயணம் போய்ப் பாருங்க ரொம்ப சவுகரியமா இருக்கும்”னு வேண்டப்பட்டவங்க யாரோதான் என்னைய ரயில் பயணத்துக்கு மாத்துனாங்க. அவங்க சொன்னதும் ஒருவகைக்கு உண்மைதான்.

பஸ்ல போனா உக்காந்த இடத்த விட்டு எந்திரிக்க முடியாது... “நிக்காதீங்க சார்... ஒங்க எடத்துல உக்காருங்க”ன்னு வெரட்டுவாரு கண்டக்டர்.  வண்டி கெளம்பப் போற நேரத்துக்குத்தான் நமக்கு முட்டிக்கிட்டு நிக்கும். அவசரத்துக்கு ஒதுங்கணும்னாகூட நிம்மதியா போகமுடியாது. பஸ்காரன் எந்த இடத்துல நிறுத்தறானோ அந்த இடத்துலதான் சாப்பிடணும்... அங்கதான் மத்த இத்யாதிகளையும் முடிச்சுக்கணும்.

ஆனா பாருங்க... ரயில்ல அப்படி இல்ல. நமக்கு வர்றப்ப பாத்ரூம் போயிக்கலாம்... உக்காந்தே இருக்க கால் வலிச்சா... காலாற உள்ளுக்குள்ளயே கொஞ்சம் நடை பழகலாம். உக்கார  சீட்டே இல்லாட்டிக்கூட பிரச்சினை இல்ல. அழகா ஒரு நீயூஸ் பேப்பர விரிச்சு அப்படியே தரையில உக்காந்துடலாம்... வசதிப்பட்டா படுத்துக்கலாம். எத்தனை சவுகரியம் பாருங்க.
 இப்புடிப் போயி பழகுன பின்னாடி நாங்க இப்பெல்லாம் எதுக்கெடுத்தாலும் ரயிலுதான். அதுவும் ரிசர்வ் பண்ணாமப் போகறதில்ல. அதுலயும் லோயர் பர்த்தான். அதுதானே எல்லாத்துக்கும் வசதி.

x